உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு 4000 பேர் பலி: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு 4000 பேர் பலி: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு

பீஜிங்: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 1,14,422 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ள நிலையில், கொரோனா உருவான வுஹான் நகருக்கு சீன அதிபர் முதன்முறையாக இன்று சென்றார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47 ஆக அதிகரித்ததால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கொரோனா வைரசின் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தனிநபர் சுகாதாரம் மிகவும் அவசியம் எனக் கூறப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் இதுவரை 80,754 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

3,136 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சீனாவுக்கு அடுத்து இத்தாலியில் 9,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 4,027 பேர் உயிரிழந்ததாகவும், உலகம் முழுக்க 90க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,14,422 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ்  கடந்த நவம்பர் கடைசி வாக்கில் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவிய பின்னர்,  சீன அதிபர் ஜி ஜின்பிங், முதன்முறையாக அந்த மாகாணத்துக்கு வந்து இன்று பார்வையிட்டதாக அதிகாரப்பூர்வ ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர், வுஹானில் அமைக்கப்பட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்ததாகவும், டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் முன்ெனச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் 41 ஆக இருந்த நிலையில் தற்போது 47 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக பதிவாகியுள்ளவர்களில் டெல்லி, உத்தரபிரதேசம், ஜம்மு  மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் தலா ஒன்று மற்றும் புனேவில் இரண்டு பேர் என்று கண்டறியப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் 58  இந்தியர்களை அழைத்து வர இஏஎப் சி -17 ‘குளோப்மாஸ்டர்’ விமானம் அனுப்பப்பட்டது. இந்த விமானம் இன்று இந்தியா திரும்பும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, 5,000க்கும் மேற்பட்ட மக்களை தனிமைப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்த துணை ராணுவப் படையினரை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய ரயில்வே சார்பில் நாடு முழுவதும் உள்ள 91 மருத்துவமனைகளில் 2,000 தனிமைப்படுத்தும் வார்டுகளையும் தயார் செய்துள்ளது.

அனைத்து சர்வதேச பயணிகளும் இப்போது விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் திரையிடப்பட்ட கண்காணிப்புக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர்.

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடனான வீடியோ கான்பரன்சிங் மாநாட்டில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளார்.

மொத்தத்தில் நாடு முழுவதும் 11,913 பேர் கொரோனா அறிகுறியுடன் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின்கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 8,827 விமானங்களில் இருந்து மொத்தம் 9,41,717 சர்வதேச பயணிகள் விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், 54 பயணிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 177 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 33,599 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவையை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடிதங்களை அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரசுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆப்கானிஸ்தான் நாடு, இன்று முதல் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் பயணிகளை தற்காலிகமாக தடை செய்து அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

.

மூலக்கதை