இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா: பதக்கத்தை மாற்றுத்திறன் சிறுமிக்கு வழங்கிய சோபி...மெல்போர்ன் மைதானத்தில் நெகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா: பதக்கத்தை மாற்றுத்திறன் சிறுமிக்கு வழங்கிய சோபி...மெல்போர்ன் மைதானத்தில் நெகிழ்ச்சி

மெல்போர்ன்: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை சேர்த்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 99 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா மகளிர் அணி, டி20 உலகக்கோப்பையில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக தீப்தி ஷர்மா 33 ரன்கள் எடுத்தார்.

முதல்முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றுவிடும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்ளுக்கு போட்டியின் முடிவு பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் தங்கள் வெற்றியை மைதானத்தில் கொண்டாடினர்.

அந்நாட்டு வீராங்கனை சோபி மோலினக்ஸ் மைதானத்திற்குள் ஒரு ரசிகரைக் கவனித்தார். அவர், தனது வெற்றியாளருக்கான பதக்கத்தை அந்த மாற்றுத்திறன் சிறுமியான ரசிகருக்கு வழங்கி, அவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இவரது செயலை, ஐசிசி வெகுவாக பாராட்டி உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் 86,174 பேர் கலந்து கொண்டதாக ஐ. சி. சி அறிவித்துள்ளது.

இது, ஆஸ்திரேலியாவில் நடந்த பெண்கள் விளையாட்டு போட்டியில், அதிகபட்ச பார்வையாளர்கள் பங்கேற்ற நிகழ்வாகும்.

.

மூலக்கதை