7 மாத ‘நீண்ட’ ஓய்வுக்கு பின்னர் களம் காண வந்துவிட்டார் தோனி: நள்ளிரவில் சென்னையில் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
7 மாத ‘நீண்ட’ ஓய்வுக்கு பின்னர் களம் காண வந்துவிட்டார் தோனி: நள்ளிரவில் சென்னையில் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: 13வது ஐபிஎல் - 2020 சீசன் போட்டிகள் வருகிற 29ம் தேதி தொடங்க உள்ளது. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ உட்பட 8 அணிகள் பங்கேற்கும் 60 போட்டிகள் கொண்ட இந்த ஐபிஎல் தொடர் மே மாதம் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தொடரின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான பயிற்சியை இரு அணி வீரர்களும் விரைவில் தொடங்கவுள்ளனர். ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியிலும் ஒவ்வொரு வீரராக சொந்த மண்ணான சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

நேற்று மாலை அம்பத்தி ராயுடு சென்னை வந்தார்.

இந்நிலையில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியின் கேப்டன் ‘தல’ தோனி நேற்று நள்ளிரவு சென்னை வந்தார்.

அவரது வருகையையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் தோனி வருகையை கொண்டாடி வருகின்றனர்.

நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்த தோனியை அவரது ரசிகர்கள் விமான நிலையத்திற்கு வந்து வாழ்த்தினர். சிலர் அவருடன்  செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

உலககோப்பை அரையிறுதி தோல்விக்கு பிறகு கடந்த 7 மாத காலமாக கிரிக்கெட் களத்தில் தோனியை காண முடியாமல் போனது. தற்போது, தோனியின் சென்னை வருகை அவரது ரசிகர்களுக்கு இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முதல் அவர் சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சக வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறது.

.

மூலக்கதை