டிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

தினகரன்  தினகரன்
டிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: ‘தெலங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார் மீது வழக்கு பதிய உத்தரவிட முடியாது,’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் டிஷா, 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார். இது, தேசிய அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட  குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தபோதிலும், மனித உரிமை மீறப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அதில், “குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதால், போலீசார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கோரியுள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து, சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வருகிறது. இந்நிலையில், சுட்டு கொல்லப்பட்ட குற்றவாளிகளின் குடும்பத்தார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இது, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது.  அப்போது, மனுதாரர் தரப்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், “இந்த விவகாரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதால் போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், எங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையும் வழங்கப்படவில்லை. அதனால், இதில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” என குறிப்பிட்டார்.இதையடுத்து, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது. அதில் முகாந்திரம் இல்லை என்பதால் ஏற்க முடியாது.  மேலும் வழக்கு குறித்து ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதால், அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இதில் ஆணையத்தின் தரப்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், வேண்டுமானால் இழப்பீட்டு தொகை கேட்டு மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரனம் கேட்கலாம். இருப்பினும், மனுதாரர் தரப்பு விசாரணை ஆணையத்திற்கு சென்று அவர்களின் வாதங்கள், ஆதாரங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது,” என்றார்.

மூலக்கதை