2-வது டெஸ்ட்; பந்து வீச்சில் மிரட்டிய நியூசிலாந்து; மீண்டும் சொதப்பிய இந்திய அணி; முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்குள் சுருண்டது

தினகரன்  தினகரன்
2வது டெஸ்ட்; பந்து வீச்சில் மிரட்டிய நியூசிலாந்து; மீண்டும் சொதப்பிய இந்திய அணி; முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்குள் சுருண்டது

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 5-0 என அபாரமாக வென்று ஒயிட்வாஷ் சாதனை படைத்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரை நியூசி. அணி 3-0 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 63 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசி அணியின் பந்து வீச்சை ஓரளவு சமாளித்த பிரித்விஷா, புஜாரா, விஹாரி ஆகியோர் அரைசதம் எடுக்க மற்ற வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினர். கேப்டன் கோலி 3, அகர்வால் 7, ரஹானே 7, ரிஷப் பண்ட் 12, ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். நியூசிலாந்து அணி பந்துவீச்சில் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ட்ரெண்ட் போல்ட், சவுத்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை