சீனாவில் குறைந்து வரும் கொரோனா வைரஸ்; 3,000-ஐ நெருங்கும் உயிர்பலி; தென்கொரியா, ஜப்பானில் வேகமாக பரவி வருகிறது

தினகரன்  தினகரன்
சீனாவில் குறைந்து வரும் கொரோனா வைரஸ்; 3,000ஐ நெருங்கும் உயிர்பலி; தென்கொரியா, ஜப்பானில் வேகமாக பரவி வருகிறது

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில் தென்கொரியா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இந்த உயிர்க்கொல்லி வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. தென்கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000-ஐ நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு புதியதாக 594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் இதுவரை 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் கொரோனா வேகமாக பரவி வருவதால் பள்ளிகளை மூடுவதற்கு அந்நாட்டு அதிபர் ஜின் ஷோ அபே அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்புக்கு சீனாவில் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. 56 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இத்தாலியிலும் கொரோனா வைரஸ் தனது கோரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. அங்கு இதுவரை 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். சீனாவில் 78,824 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 2,788 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை