2வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரை சமன் செய்யுமா இந்தியா?

தினகரன்  தினகரன்
2வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரை சமன் செய்யுமா இந்தியா?

கிறைஸ்ட்சர்ச்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, ஹேக்லி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.00 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 5-0 என அபாரமாக வென்று ஒயிட்வாஷ் சாதனை படைத்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரை நியூசி. அணி 3-0 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குகிறது.இஷாந்த் இல்லை: முதல் டெஸ்டில் சிறப்பாகப் பந்துவீசிய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, கணுக்கால் காயம் காரணமாக 2வது டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். இது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.தொடக்க வீரர் பிரித்வி ஷா காலில் வீக்கம் இருந்தாலும், அவர் களமிறங்குவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உறுதி செய்துள்ளார். பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கும் வகையில் ஆர்.அஷ்வினுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜடேஜா இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. கோஹ்லி, புஜாரா, ரகானே பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும். நியூசிலாந்து அணியில் நீல் வேக்னர் இடம் பெறுவது, அந்த அணியின் வேகப் பந்துவீச்சுக் கூட்டணியை மேலும் பலப்படுத்தி உள்ளது. வேக்னர், போல்ட், சவுத்தீ, ஜேமிசன் ஆகியோரின் பவுன்சர் தாக்குதல் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். தொடரை வெல்ல நியூசிலாந்தும், சமன் செய்ய இந்தியாவும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, ரிஷப் பன்ட், ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஜஸ்பிரித் பூம்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷுப்மான் கில்.நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டெல், டிரென்ட் போல்ட், டி கிராண்ட்ஹோம், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம், டாரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் பட்டேல், டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், நீல் வேக்னர், ஜான் வாட்லிங்.

மூலக்கதை