ஐஎஸ்எல் கால்பந்து முதல் கட்ட அரை இறுதியில் சென்னை - கோவா மோதல்

தினகரன்  தினகரன்
ஐஎஸ்எல் கால்பந்து முதல் கட்ட அரை இறுதியில் சென்னை  கோவா மோதல்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரை இறுதி - 1 முதல் கட்ட ஆட்டத்தில் சென்னையின் எப்சி - கோவா எப்சி அணிகள் இன்று மோதுகின்றன. ஐஎஸ்எல் காலபந்து தொடரின் 6வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் மோதிய லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த கோவா,  கொல்கத்தா, பெங்களூரு, சென்னை அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.அரையிறுதி போட்டிகள் உள்ளூர்/வெளியூர் அடிப்படையில் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. சென்னை-கோவா அணிகள் மோதும் அரையிறுதி போட்டியின் முதல் கட்ட ஆட்டம் இன்று சென்னையிலும், 2வது கட்ட ஆட்டம் மார்ச் 7ம் தேதி கோவாவிலும் நடக்கும். ஐஎஸ்எல் தொடரில் இந்த 2 அணிகளும் 2வது முறையாக அரை இறுதியில் மோத உள்ளன.  2018ம் ஆண்டு கோவாவில் நடந்த முதல் சுற்று 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. சென்னையில் நடந்த 2வது சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற சென்னை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  அதில் 2வது முறையாக கோப்பையையும் வென்றது.நடப்பு சீசனின் தொடக்க லீக் ஆட்டங்களில் தட்டுத் தடுமாறிய சென்னை அணி புது பயிற்சியாளர் ஓவன் கோயல் வருகைக்கு பிறகு புதுப் புயலாக மாறியுள்ளது.  கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. அதில் 6 வெற்றி, 2 டிரா கண்டுள்ளது.  இன்று உள்ளூர் போட்டி என்பது சென்னைக்கு கூடுதல் பலம். கேப்டன் கோயன், யெலி சபா, லால்டின்லினா, செங்கதே, வல்ஸ்கிஸ் (13 கோல், 4வது இடம்), தமிழக வீரர்கள் வென்ஸ்பால், ஜெர்மன்பிரீத் சிங், டிரகோஸ், தொய்சிங் ஆகியோர் களத்தில் தொடர்ந்து அசத்தி வருகின்றனர். மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள தனபால் கணேஷ் 2018ம் ஆண்டு கோவாவுக்கு எதிரான அரையிறுதியில் கோல் அடித்தவர். அதே நேரத்தில் கோவா அணியை குறைத்து மதிப்பிட முடியாது. நடப்பு தொடருடன் 6 ஐஎஸ்எல் தொடர்களில் விளையாடி  5வது முறையாக கோவா அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதிலும் ஒவ்வொரு முறையும் அதிக கோல் அடித்த அணியாக கோவா தொடர்வது அந்த அணியின் சுறுசுறுப்புக்கு காரணம். அதில் 2முறை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது கோவா. அதில் முதல்முறை சென்னையிடமும், கடந்த ஆண்டு பெங்களூரிடமும் தோற்றுப்போனது ரசிகர்களுக்கு ஆச்சர்யம்தான்.ஆனால் இந்த முறை அதிக கோல் (46) அடித்த அணியாக மட்டுமின்றி, 18 போட்டிகளில் 12ல் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.  பட்டியலில் 4வது இடத்தில் உள்ள சென்னை 32 கோல்தான் அடித்துள்ளது. அவையும் கடைசி 14 போட்டிகளில் அடித்தவை. முதல் 4 போட்டிகளில் சென்னை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆனால் கோவா அணிக்காக தொடர்ந்து கோல் மழை பொழிந்து வரும் கோரோமினஸ்  14, ஹியூகோ 11 கோல் அடித்து 2, 4வது இடங்களில் இருக்கின்றனர். முதல் சுற்றுப் போட்டியில் 2 அணிகளும் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற மல்லுக்கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மூலக்கதை