டிரம்ப்பின் இந்திய பயணம் ஆஹா... ஓஹோ...:அமெரிக்க அமைச்சர்கள் பாராட்டு

தினகரன்  தினகரன்
டிரம்ப்பின் இந்திய பயணம் ஆஹா... ஓஹோ...:அமெரிக்க அமைச்சர்கள் பாராட்டு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட இந்திய பயணத்தால் இருநாட்டு உறவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்கள் டிவிட்டரில் போட்டிப் போட்டு புகழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24, 25ம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.  இதில் இந்திய ராணுவத்துக்கு 3 பில்லியன் டாலர் அளவுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தமும் இடம் பெற்றிருந்தது. வெற்றிகரமாக நிறைவடைந்த அதிபரின் சுற்றுப்பயணம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட டிவிட்டில் `இந்தியாவுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவு மிக வலுவானது’ என குறிப்பிட்டு பிரதமர் மோடியுடன் இந்திய பயணத்தின்போது டிரம்ப் எடுத்துக் கொண்ட 4 புகைப்படங்களை பதிவிட்டிருந்தது. இந்த பதிவு தொடர்பாக டிரம்பின் கருத்தை இணைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று வெளியிட்டுள்ள ரீடிவிட்டில், ‘இந்தியாவில் அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முதல் அரசு முறைப்பயணம், இந்தியாவுடன் அமெரிக்கா வைத்துள்ள உறவின் மதிப்பை நிருபித்துள்ளது. இருநாடுகள் இடையேயான ஜனநாயக கலாச்சாரம் நம்மை இணைத்துள்ளது. இருநாடுகள் இடையேயான உறவு வலுவானதாக வளரும்,’ என தெரிவித்துள்ளார்.  இந்த பயணம் குறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய வெளியுறவுத் துறை பொறுப்பு வகிக்கும் அமெரிக்க அமைச்சர் அலைஸ் ஜி வெல்ஸ் வெளியிட்டுள்ள டிவிட்டரில், `இந்தியா -அமெரிக்கா இடையேயான நட்புறவில் இந்த வாரம் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, பாதுகாப்புத் துறை, இந்தோ -பசிபிக் ஒத்துழைப்பு ஆகியவற்றில் மேலும் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது,’ என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை