சிரியாவில் குண்டுவீச்சு : 33 துருக்கி வீரர்கள் பலி

தினகரன்  தினகரன்
சிரியாவில் குண்டுவீச்சு : 33 துருக்கி வீரர்கள் பலி

அங்காரா:  சிரியாவில் அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் துருக்கி வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இந்நிலையில், வடக்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீது சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ரஷியா உதவி செய்து வருகின்றது. இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்–்ச்சி குழுக்களுக்கு துருக்கி ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தங்கள் ராணுவத்தையும் அது களமிறக்கி உள்ளது. இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் ரஷ்ய படைகளுடன் இணைந்து சிரியா விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்தனர். மேலும். பல வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு துருக்கி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நேட்டோ பொதுச் செயலளார் கவுசோக்லு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துருக்கியின் வெளியுறவு துறை அமைச்சருடன் அவர் தொலைபேசியில் பேசி உண்மை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். “சிரிய அரசும், அதன் ஆதரவாளரான ரஷ்யாவும் கண்மூடித்தனமாக நடத்தியுள்ள வான்வெளி தாக்குதல் கண்டனத்துக்குரியது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.  இட்லிப் மாகாணத்தில் உள்ள கண்காணிப்பு தளங்களை திரும்ப பெறுமாறு துருக்கியை சிரியா வலியுறுத்தி உள்ளது. அதே நேரம், சிரியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாக துருக்கி மீது ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது.

மூலக்கதை