7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சரிவு: பாதிப்பு தொடரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சரிவு: பாதிப்பு தொடரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையிலேயே நீடித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 5.1 சதவீதமாக மட்டுமே உள்ளது. கடந்த காலாண்டில் வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.7 சதவீதமாக சரிந்துள்ளது.  இந்திய பொருளாதாரம் மிகவும் மந்த நிலையிலேயே நீடித்து வருகிறது. இதுபற்றி பல்வேறு நிதி அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.  இந்நிலையில், மத்திய புள்ளியியல் அலுவலகம் ஜிடிபி புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான முதல் 9 மாதங்களில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.1 சதவீதமாக உள்ளது என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஜிடிபி 6.3 சதவீதமாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ஜிடிபி 4.7 சதவீதம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டு இதே காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாத சராசரியை விட இது குறைவு. கடந்த 2012-13 நிதியாண்டு ஜனவரி - மார்ச் காலாண்டில் ஜிடிபி 4.3 சதவீதமாக இருந்தது. இதன்பிறகு 7 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவாக இது காணப்படுகிறது.  சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச சந்தைகளில் பாதிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து, உலக அளவிலான பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. உற்பத்தி துறையை பொறுத்தவரை, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் சீனாவையே நம்பியுள்ளன. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு நீடித்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிப்புக்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ரிசர்வ் வங்கியும் இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே, இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் வலியுத்துகின்றனர். எனினும், இந்த பொருளாதார குறியீடு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.நிதிப்பற்றாக்குறை  128.5 சதவீதமாக உயர்வுநாட்டின் நிதிப்பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிகரித்துள்ளது என சிஏஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பட்ஜெட் இலக்கை விட, ஜனவரி இறுதியில் நிதி பற்றாக்குறை 128.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என சிஏஜி தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில், திருத்திய பட்ஜெட் மதிப்பீடுகளின்படி இந்த பற்றாக்குறை 121.5 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் மார்ச் மாத இறுதியில் நிதி பற்றாக்குறை ₹7,66,846 கோடியாக இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இந்த பற்றாக்குறை 9,85,472 கோடியாக உள்ளது. வருவாய் குறைந்ததால் மத்திய அரசு நிதிப்பற்றாக்குறையில் சிக்கி தவிக்கிறது. இதை கருத்தில் கொண்டு கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 3.3 சதவீதம் என இருந்ததை தளர்த்தி 3.8 சதவீதமாக நிர்ணயித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அரசியல் செய்வதில்தான் கவனம் ரகுராம் ராஜன்பொருளாதார வளர்ச்சி சரிவு குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், ‘‘மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த கவனம் செலுத்தவில்லை. மாறாக, அரசியல் செய்வதிலும் மற்றும் சமூக ரீதியான கொள்கைகளிலும்தான் கவனம் செலுத்துகிறது. பொருளாதார சரிவுக்கு இதுதான் முக்கிய காரணம்’’ என கூறியுள்ளார்.

மூலக்கதை