இந்திய பெண்கள் வெற்றி தொடருமா | பெப்ரவரி 28, 2020

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் வெற்றி தொடருமா | பெப்ரவரி 28, 2020

மெல்போர்ன்: பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில்  இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா உட்பட 10 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.

‘ஹாட்ரிக்’ வெற்றி: ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியாவை (17 ரன் வித்தியாசம்) வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை (18 ரன்) சாய்த்த இந்திய அணி, 3வது லீக் போட்டியில் நியூசிலாந்தை (3 ரன்) தோற்கடித்து, ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் 4வது முறையாக (2009, 2010, 2018, 2020) அரையிறுதிக்குள் நுழைந்தது.

மெல்போர்னில் பிப். 29ல் நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. இதில் வெல்லும் பட்சத்தில், தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்து ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை உறுதி செய்யலாம்.

ஷபாலி நம்பிக்கை: இந்திய அணியின் ‘பேட்டிங்’ திருப்தி அளிக்கவில்லை. கடந்த மூன்று போட்டியிலும் (132, 142, 133 ரன்) மிகப் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 16, மட்டும் நம்பிக்கை தருகிறார். மூன்று போட்டியில் 114 ரன்கள் (29, 39, 46 ரன்) குவித்த இவர், மீண்டும் கைகொடுக்கலாம். சீனியர் வீராங்கனைகளான கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி எழுச்சி காண வேண்டும். ஸ்மிருதி மந்தனா காயமடைந்திருப்பது பின்னடைவு. ‘மிடில்–ஆர்டரில்’ தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் மழை பொழிந்தால் நல்லது.

பூனம் அசத்தல்: கடந்த மூன்று போட்டியிலும் பவுலர்கள் வெற்றி தேடித்தந்தனர். ‘சுழலில்’ பூனம் யாதவ் (8 விக்கெட்) அசத்துகிறார். இவரது விக்கெட் வேட்டை இன்றும் தொடரலாம். இவருக்கு மற்ற ‘சுழல்’ வீராங்கனைகளான ராஜேஸ்வரி கயக்வாத் (3 விக்கெட்), தீப்தி சர்மா (1), ராதா யாதவ் (1) ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் ஷிகா பாண்டே (6 விக்கெட்), அருந்ததி ரெட்டி (2) ஆறுதல் தருகின்றனர்.

இலங்கை ஏமாற்றம்: முதலிரண்டு லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வி கண்ட இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. மீதமுள்ள 2 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கலாம்.

பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் இந்தியா, இலங்கை அணிகள் 5வது முறையாக மோதுகின்றன. முன்னதாக விளையாடிய 4 போட்டியில் இந்தியா 3, இலங்கை ஒரு போட்டியில் வென்றன.

* பெண்களுக்கான சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் இந்தியா, இலங்கை அணிகள் 17 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 13, இலங்கை 3ல் வெற்றி பெற்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

பாக்., தோல்வி

நேற்று, கான்பெராவில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. கேப்டன் ஹீதர் நைட் (62) கைகொடுக்க, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் 116 ரன்னுக்கு சுருண்டு, 42 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அலியா ரியாஸ் 41 ரன் எடுத்தார்.

* மற்றொரு ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, தாய்லாந்து அணிகள் மோதின. லீசெல்லி லீ (101), சுனே லுாஸ் (61) கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. கடின இலக்கை விரட்டிய தாய்லாந்து அணி 19.1 ஓவரில் 82 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

மூலக்கதை