சிறு, குறு நிறுவனங்களுக்கான கண்காட்சி!5ல் துவங்கி, மூன்று நாள் நடக்கிறது

தினமலர்  தினமலர்
சிறு, குறு நிறுவனங்களுக்கான கண்காட்சி!5ல் துவங்கி, மூன்று நாள் நடக்கிறது

திருப்பூர்:வரும் மார்ச் 5ல் துவங்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கான பிரத்யேக கண்காட்சி, கருத்தரங்கில் பங்கேற்க, ஜவுளித்துறையினருக்கு தொழில் பாதுகாப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.சிறு, குறு நிறுவனங்கள் துறை, திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு சார்பில், சிறு, குறு நிறுவனங்களுக்கான பிரத்யேக எம்.ஐ.கே.ஏ.எப்., கண்காட்சி அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில், வரும் மார்ச் 5 ல் துவங்கி 7 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மொத்தம் 190 அரங்குகளில், கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட மும்பை, டில்லி என, நாடுமுழுவதும் உள்ள சிறு, குறு துணி, ஆடை தயாரிப்பு, அக்சசரீஸ் வர்த்தகம்; ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அரங்கம் அமைக்கின்றன.அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என உலகளாவிய நாடுகளைச்சேர்ந்த வர்த்தகர்கள்; வர்த்தக முகமை நிறுவனத்தினர்; உள்நாட்டு வர்த்தகர்கள் கண்காட்சியை பார்வையிட்டு, வர்த்தக விசாரணை நடத்த உள்ளனர்.கண்காட்சியின் ஒருபகுதியாக, மூன்று நாட்களும், காலை, 9:30 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.துவக்க நாளான 5ம் தேதி, சிறு, குறு நிறுவனங்கள், பெரிய வர்த்தக முகமை நிறுவனங்களிடமிருந்து ஆடை தயாரிப்பு ஆர்டர்களை கைப்பற்றும் வழிமுறைகள்; வெளிநாட்டு வர்த்தகர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன.அமெரிக்கா, ஐரோப்பா அல்லாத பிற நாடுகளில் ஆடை ஏற்றுமதிக்கு சந்தை வாய்ப்புகள்; ஏற்றுமதிக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள்; ஏற்றுமதி நிறுவனங்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள். வெவ்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் வர்த்தக சட்ட நடைமுறைகள். புதுமையான ஆடைகளை தயாரித்து, வர்த்தகத்தை கைப்பற்றும் நுட்பங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
சர்வதேச வல்லுனர்கள் பங்கேற்று, விளக்கம் அளிக்க உள்ளனர்.அடல் இன்குபேஷன் மையம் மூலம், தொழில்முனைவோர் புதுமையான ஆடை ரகங்கள், ஷூ, கிருமி தொற்றாத கையுறை ரகங்களை உருவாக்கிவருகின்றனர். ஆடை உற்பத்தி துறையினர் அறிந்துகொள்ளும்வகையில், இன்குபேஷன் மையம், தொழில்முனைவோர் உருவாக்கிய புதுமைகளை காட்சிப்படுத்துகிறது.கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உட்பட ஜவுளி நகர தொழில் துறையினர் அனைவரும் பங்கேற்க தொழில் பாதுகாப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

மூலக்கதை