வடகிழக்கு டெல்லியின் கலவர பகுதியில் பதட்டம் தணிகிறது: 144 தடை உத்தரவு 10 மணி நேரம் தளர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வடகிழக்கு டெல்லியின் கலவர பகுதியில் பதட்டம் தணிகிறது: 144 தடை உத்தரவு 10 மணி நேரம் தளர்வு

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியின் கலவர பகுதியில் பதட்டம் குறைந்து வருவதால், 144 தடை உத்தரவு இன்று 10 மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ளது. உளவுத்துறை ஆபீசர் மரண வழக்கில் ஆம்ஆத்மி கவுன்சிலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 38 பேர் கலவரத்தால் பலியான நிலையில், 48 எப். ஐ. ஆர் பதிவு செய்யப்பட்டு 514 பேர் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு பணியில் 7,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் 2 சிறப்பு புலனாய்வுக் குழுக்களின் விசாரணை தொடங்கி உள்ளது.

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மற்றும் ஆதரவு குழுக்கள் இடைேய ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததால், கடந்த 23ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை தடையின்றி தொடர் தாக்குதல்கள் நடந்தன. இதனால் ஏற்பட்ட மோதலில் இதுவரை 39 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

200க்கும் மேற்பட்டோர் வெடிகுண்டு காயங்களுடனும், ஆயுத காயங்களுடன் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் நிலைமை இன்னும் பதட்டமாக உள்ளதால், நிலைமையைக் கண்காணிக்க பாதுகாப்புப் படையினர் வீதிகளில் தொடர்ந்து ரோந்து சென்றவண்ணம் உள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவின் இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளன.

துணை போலீஸ் கமிஷனர்கள் (டிசிபி) ஜாய் டிர்கி மற்றும் டிசிபி ராஜேஷ் தியோ ஆகியோர் தலைமையில் இக்குழு செயல்படும். ஒவ்வொரு குழுவிலும் நான்கு உதவி போலீஸ் கமிஷனர் (ஏ. சி. பி), 12 ஆய்வாளர்கள், 16 துணை ஆய்வாளர்கள் மற்றும் 12 தலைமை கான்ஸ்டபிள் உள்ளிட்ட போலீசார் இருப்பார்கள்.

கூடுதல் காவல்துறை ஆணையர் (குற்றம்) பி. கே. சிங்கிற்கு இரண்டு எஸ். ஐ. டி-களின் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நீடித்த கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து எப். ஐ. ஆர்களும், இரண்டு எஸ். ஐ. டி. களுக்கு மாற்றப்படுவதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. சிறப்பு புலனாய்வு குழுக்கள் இன்று முதல் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளது.

கலவர வழக்குகளில் இதுவரை 48 எப். ஐ. ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ள நிலையில் கலவரத்தில் தொடர்புடையதாக கூறி 514 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கலவரத்துக்கு இடையே, வடகிழக்கு டெல்லியில் இன்றும் (பிப். 28) நாளையும் நடக்கவிருந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளின் தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒத்திவைத்தது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட சாந்த்பாக் பகுதியில் சாக்கடை வடிகால் கால்வாய் ஒன்றில் உளவுத்துறை பிரிவைச் சேர்ந்த புலனாய்வு பணியாளர் ஒருவர் புதன்கிழமை இறந்து கிடந்தார்.

அவரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், அங்கித் சர்மா (26) என்பதும், அவர் கும்பலால் கல் வீசி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


இதுகுறித்து, சர்மாவின் தந்தை தேவேந்திரா கூறுைகயில், ‘‘செவ்வாய்க்கிழமை மாலை 5. 30 மணியளவில் வீட்டில் இருந்து சென்ற அங்கித் சர்மா மீண்டும் வீடு திரும்பவில்லை. அதனால், ​நாங்கள் அவரைத் தேட ஆரம்பித்தோம்.

புதன்கிழமை அதிகாலை 3 மணி வரை நாங்கள் அவரைத் தேடி வந்தோம். பின்னர் காலை 10 மணியளவில், அவரது உடல் சந்த் பாக் வடிகால் கால்வாயில் உள்ளே 2 நாட்களாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அங்கித் கொல்லப்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை’’ என்றார்.

உளவுபிரிவு பணியாளர் அங்கித் கொலை வழக்கில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அக்கட்சியின் முதன்மை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்து ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

அங்கித் சர்மாவின் தந்தை தேவேந்திரா கொடுத்த புகாரின் அடிப்படையில் தயால்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. கஜூரி காஸ் பகுதியில், ஹுசைனுக்கு சொந்தமான தொழிற்சாலையை டெல்லி போலீசார் சீல் வைத்தனர்.

உசேனின் வீட்டில் இருந்து பெட்ரோல் குண்டுகள், கற்கள் மற்றும் அமில ரசாயனங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக, தனியார் டிவி ேசனலில் ஒளிபரப்பான செய்தியின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னதாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது உசேனின் வீட்டில் குறைந்தது 100 கலவரக்காரர்களும் இருந்தனர்.

வீட்டின் இரண்டாவது தளத்தில் கற்கள் அடங்கிய பைகள், நான்காவது மாடியில் அமில ரசாயனங்கள் நிரப்பப்பட்ட பாலிதீன் பைகள், கற்கள், பெட்ரோல் குண்டுகள் நிரப்பப்பட்ட பாட்டில்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார், தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 36 மணி நேர இடைவெளியில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வடகிழக்கு டெல்லியில் தலா 100 பேரை கொண்ட 70 துணை ராணுவப் படைகள் (7,000 போலீசார்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்றிரவு உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் கலந்து கொண்ட கூட்டத்தில், வடகிழக்கு நிலைமை மதிப்பாய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல், கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு முறை கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம். வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டுவதில் ஆர்வமுள்ள குற்றவாளிகள் மற்றும் குழுக்களின் வலையில் சிக்கிவிட வேண்டாம்.

அனைத்து தரப்பு உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அமைதிக் குழுவை டெல்லி காவல்துறை ஏற்படுத்தும். அதன்மூலம் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை இந்த குழுக்கள் சந்திக்கின்றன.

இயல்புநிலை திரும்ப ேதவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று (பிப்.

28) வடகிழக்கு டெல்லி பகுதியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு 10 மணிநேரம் தளர்த்தப்படுகிறது. டெல்லியில் உள்ள 203 காவல் நிலையங்களில் 12 மட்டுமே கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியின் பிற பகுதிகளில் இயல்பு மற்றும் வகுப்புவாத நல்லிணக்கம் தொடர்கிறது.

கடந்த 36 மணி நேரத்தில் வடகிழக்கு டெல்லியில்எந்த  ஒரு பெரிய சம்பவமும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை