ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் டிரான்ஸ்பர் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் டிரான்ஸ்பர் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசு டாக்டர்களை பணி இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், டாக்டர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் ஐந்து நாட்கள் அரசு மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பலர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

பயிற்சி டாக்டர்களும், செவிலியர்கள், ஊழியர்கள்தான் சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து, போராட்டம் நடத்திய டாக்டர்கள் குழுவிடம் அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு சார்ஜ் மெமோ எனும் குற்றச்சாட்டு குறிப்பாணையும், பலருக்கு பணிமாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

சேலத்தில் ஒரு டாக்டர் பணிமாறுதல் உத்தரவால் மன உளைச்சலில் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர்  பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எட்டு மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த  வழக்கு கடந்த முறை நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி இன்று அளித்த உத்தரவு வருமாறு:
அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை. போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசு மருத்துவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்ட மற்றும் சார்ஜ் மெமோ கொடுத்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது.

அரசு டாக்டர்களின் பிரச்னைகளை தீர்க்காததால் தான் போராட்டம் வந்தது.

இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அரசு டாக்டர்களின் கோரிக்கை குறித்து அரசு மருத்துவர்களும், அரசும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை