எழுச்சி பெறுமா இந்திய அணி * நாளை இரண்டாவது டெஸ்ட் துவக்கம் | பெப்ரவரி 27, 2020

தினமலர்  தினமலர்
எழுச்சி பெறுமா இந்திய அணி * நாளை இரண்டாவது டெஸ்ட் துவக்கம் | பெப்ரவரி 27, 2020

கிறைஸ்ட்சர்ச்: இந்தியா, நியூசிலாந்து மோதும் இரண்டாவது டெஸ்ட் நாளை துவங்குகிறது. இதில் இந்திய அணி வீரர்கள் எழுச்சி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்வு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வீழ்ந்த இந்திய அணி தொடரில் 0–1 என பின் தங்கியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் நாளை கிறைஸ்ட்சர்ச், ஹாக்லே ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.

சுப்மன் அறிமுகம்

ரோகித் சர்மா காயத்தால் விலகியதால் பிரித்வி ஷா துவக்க வீரர் வாய்ப்பு பெற்றார். முதல் டெஸ்டில் 16, 14 ரன்கள் எடுத்தார். தற்போது இடது கால் வீக்கத்தால் அவதிப்படும் இவருக்கு நேற்று இரத்த பரிசோதனை நடந்தது. வீரர்களுக்கான பயிற்சியில் பங்கேற்கவில்லை. மாறாக சுப்மன் கில் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டார்.

இதை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கண்காணித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது அருகில் சென்று தேவையான ‘அட்வைஸ்’ கொடுத்தார். ஒருவேளை பிரித்வி குணமடையவில்லை எனில், இரண்டாவது டெஸ்டில் சுப்மன் கில் அறிமுக வாய்ப்பு பெறுவார் எனத் தெரிகிறது. இவர் மயங்க் அகர்வாலுடன் இணைந்து துவக்கம் தருவார்.

ஜடேஜா வருகை

அதேபோல முதல் டெஸ்டில் 3 விக்கெட் சாய்த்தாலும், பேட்டிங்கில் சுழல் வீரர் அஷ்வின் 0, 4 ரன்கள் தான் எடுத்தார். இதனால் அஷ்வினுக்குப் பதில் ஜடேஜாவை கொண்டு வரும் திட்டத்தில் கோஹ்லி இருக்கிறாராம்.

ஆடுகளம் எப்படி

இரண்டாவது டெஸ்ட் நடக்கவுள்ள கிறைஸ்ட்சர்ச்சில் மைதானத்துக்கும், ஆடுகளத்துக்கும் வித்தியாசம் இல்லாமல், அதிக புற்கள் நிறைந்து காணப்படுகிறது. முதல் டெஸ்ட் போல, முதல் நாளில் ‘வேகங்களுக்கு’ கொண்டாட்டமாக இருக்கும் என்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். கடைசியாக இங்கு நடந்த 6 டெஸ்டில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 286 ரன் தான்.

மூலக்கதை