நடந்ததை மறந்து விடுங்கள் * என்ன சொல்கிறார் ரகானே | பெப்ரவரி 27, 2020

தினமலர்  தினமலர்
நடந்ததை மறந்து விடுங்கள் * என்ன சொல்கிறார் ரகானே | பெப்ரவரி 27, 2020

கிறைஸ்ட்சர்ச்: ‘‘வெலிங்டன் டெஸ்டில் நடந்ததை மறந்து விடுங்கள். அங்கு செய்த தவறுகளை அடுத்த டெஸ்டில் சரி செய்ய வேண்டும்,’’ என ரகானே தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் இரு இன்னிங்சிலும் சொதப்பினர். இதுகுறித்து இந்திய அணி வீரர் ரகானே கூறியது:

முதல் டெஸ்டில் நியூசிலாந்து பவுலர்கள் நன்றாக செயல்பட்டனர். புஜாரா முடிந்தவரை ரன்கள் சேர்த்துவிட முயற்சித்தார். ஆனால் பவுல்ட், சவுத்தி அதற்கு இடம் தரவில்லை. தெளிவான திட்டத்துடன் பந்து வீசி அசத்தினர்.

எங்களைப் பொறுத்தவரையில் ‘மிடில் ஆர்டரில்’ ஒரு அணியாக எப்படி விளையாடுவது என திட்டமிட்டு, அதற்கு ஏற்ப பயிற்சியில் ஈடுபட வேண்டும். முதல் டெஸ்டில் நடந்ததை மறந்து விடுங்கள். அதுகுறித்து அதிகம் யோசிக்க வேண்டாம்.

வீரர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து புத்துணர்ச்சியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர் கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப, எதிரணியின் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில் தான் வெற்றி அடங்கியுள்ளது.

நியூசிலாந்து மண்ணில் ஒரு டெஸ்டில் தான் தோற்றுள்ளோம். இரண்டாவது டெஸ்ட் ஆடுகளம் எங்களுக்கு கைகொடுக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

மீண்டும் தயார்

நியூசிலாந்து அணி துவக்க வீரர் டாம் லதாம் கூறுகையில்,‘‘உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள் கோஹ்லி. எவ்வித சூழலிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். இதனால் இவர் களமிறங்கி விட்டால் விரைவில் அவுட்டாக்க முயற்சிப்போம். மீண்டும் சூழ்நிலை கைகொடுத்தால் எங்கள் திட்டத்தை செயல்படுத்துவோம்,’’ என்றார்.

மூலக்கதை