ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் அமெரிக்கா - தலிபான் நாளை அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் இம்ரானும் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் அமெரிக்கா  தலிபான் நாளை அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் இம்ரானும் பங்கேற்பு

இஸ்லாமாபாத்: அமெரிக்கா - தலிபான்கள் இடையே நாளை கத்தாரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்கிறார். ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க வீரர்கள் ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், தனது வீரர்களை வாபஸ் பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக, தலிபான்கள்- அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதில் சாதகமான முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.இந்நிலையில், அமெரிக்கா - தலிபான்கள் இடையே கத்தார் நாட்டின் தோஹாவில் நாளை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று,  நேற்றே அவர் கத்தாருக்கு சென்றார். இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், `பாகிஸ்தான் பிரதமரின் இந்த பயணத்தின்போது கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்தானியை சந்தித்து பேசுகிறார். அப்போது, இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிராந்திய அளவிலான மேம்பாடு குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் ஆப்கானில் உள்ள அமெரிக்க படை வாபஸ் பெறப்படும்.

மூலக்கதை