கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கான தண்ணீர் திறப்பு

தினகரன்  தினகரன்
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கான தண்ணீர் திறப்பு

பெங்களூரு: கே.ஆர்.எஸ். அணையில் இருந்து ஜனவரி மற்றும் பிப்ரவரி  மாதங்களுக்கு திறக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து  விட்டுள்ளது.கர்நாடகா-தமிழக விவசாயிகளின் ஜீவநாடியாக இருக்கும்  காவிரி நதியில் இருந்து கிடைக்கும் தண்ணீரை பங்கிட்டு கொள்ளும் விஷயத்தில்  இரு மாநிலங்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. நதிநீர் பங்கீடு  பிரச்னைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007ம்  ஆண்டு வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 191.50 டிஎம்சி தண்ணீர்  ஆண்டுதோறும் திறக்க வேண்டும் என்று கூறியிருந்தது. நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து இரு மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு  மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணை முடிந்து கடந்த 2018  பிப்ரவரி 16ம் தேதி வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு நடுவர் மன்றம் வழங்க  உத்தரவிட்டிருந்த தண்ணீரில் 14.75 டிஎம்சி குறைத்து ஆண்டுதோறும் 176.75  டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.  இதில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு  தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டு ஜனவரி மற்றும்  பிப்ரவரி மாதங்களில் தமிழகத்திற்கு 5 டிஎம்சி தண்ணீர் திறக்–்க வேண்டும்.  கே.ஆர்.எஸ். அணை மொத்தம் 124.80 அடி உயரம் கொண்டுள்ளது. நேற்று மாலை  நிலவரப்படி அணையில் 112.57 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு  வினாடிக்கு 314 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு  5,885 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக பாசனத்திற்கு வினாடிக்கு  2,500 கனஅடியும், தமிழகத்திற்கு 2,885 கனஅடியும் தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 49.452 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் திறன்  கொண்ட அணையில் தற்ேபாது 34.386 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணையில் போதிய நீர்  இருப்பது உள்ளதால், இவ்வாண்டு கோடையில் குடிநீர் பஞ்சம் இருக்காது என்று  அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை