டெல்லி உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் தொடர்பு: ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்குப் பதிவு...கட்சியில் இருந்து நீக்கம்!

தினகரன்  தினகரன்
டெல்லி உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் தொடர்பு: ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்குப் பதிவு...கட்சியில் இருந்து நீக்கம்!

புதுடெல்லி: டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறை மற்றும் உளவுத்துறை அதிகாரி இறப்பு தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹீர் உசேன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சிஏஏவுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் வெடித்தது. இதில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹீர் உசேன் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். மேலும், தாஹீர் உசேன் வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் இருந்து உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மாவின் சடலமும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, தாஹீர் உசேன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தாஹீர் உசேனுக்கு சொந்தமான தொழிற்சாலைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை செய்துள்ளார். இந்த கலவரத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால் இரட்டை தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தாஹர் உசேனை கட்சியில் இருந்து நீக்கி ஆம் ஆத்மி மேலிடம நடவடிக்கை எடுத்துள்ளது. 400 இடங்களில் கத்திக்குத்துஇதற்கிடையில், உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மாவின் உடலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக, பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடல் முழுவதும் காயங்கள் இருந்தைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை இப்படிப்பட்ட ஒரு கொடூரமான கொலையை தங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம் அங்கித் ஷர்மாவை வன்முறைக் கும்பல் நீண்ட நேரம் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. டெல்லி சாந்த்பாக் பகுதியைச் சேர்ந்த அங்கித் ஷர்மாவி, 2017ம் ஆண்டில் இருந்து உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். வன்முறை நடந்த செவ்வாய்க்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அங்கித் ஷர்மாவி, நிலைமையை அறிந்துகொள்வதற்காக மீண்டும் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரை வன்முறையாளர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியும், கத்தியால் குத்தியும் கொன்று உடலை கால்வாயில் போட்டுள்ளனர். மறுநாள் அவரது உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை