புந்தேல்கண்ட் விரைவுச்சாலை திட்டம்: நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

தினகரன்  தினகரன்
புந்தேல்கண்ட் விரைவுச்சாலை திட்டம்: நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

டெல்லி: உத்திரபிரதேசத்தில் நாளை நடைபெறும் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்த உத்தரபிரதேச பாதுகாப்பு தளவாட தொழிலக வழித்தட திட்டத்துடன் இணைந்த வகையில் இந்த புந்தேல்கண்ட் விரைவுச்சாலை திட்டம் இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உத்தரபிரதேச அரசால் கட்டப்படும் புந்தேல்கண்ட் விரைவு சாலை அந்த மாநிலத்தின் சித்திரகூடம், பாண்டா, ஹமீர்பூர், ஜலான் மாவட்டங்களின் வழியாக செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரைவு சாலை ஆக்ரா, லக்னோ விரைவுச்சாலை மற்றும் யமுனை விரைவுச்சாலை ஆகியவற்றின் வழியாக புந்தேல்கண்ட் பகுதியை தலைநகர் டெல்லியுடன் இணைகிறது என்றும், கூறப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்காக சித்திரகூடம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்தபடியே நாடு முழுவதும் விவசாயிகளுக்கான 10 ஆயிரம் உற்பத்தி அமைப்புகளையும் தொடங்கி வைக்கிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அலகாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சுமார் 19 கோடி மதிப்பில் 26 ஆயிரம் பயனாளிகளுக்கு அப்போது உதவிகள் வழங்கப்படவுள்ளன என பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை