மது தொழிற்சாலையில் 5 பேர் சுட்டுக்கொலை: ஊழியர் வெறிச்செயல்

தினகரன்  தினகரன்
மது தொழிற்சாலையில் 5 பேர் சுட்டுக்கொலை: ஊழியர் வெறிச்செயல்

மில்வாக்கி:  அமெரிக்காவில் மதுபான தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஊழியரும்  தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் மில்வாக்கியில் மோல்சன் கூர்ஸ் வளாகத்தில் மதுபான தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அப்போது, திடீரென உள்ளே நுழைந்த ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால், அங்கிருந்த ஊழியர்கள் அலறி கூச்சலிட்டபடி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கிச்சூட்டில்  குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே 5 ஊழியர்கள் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மோல்சன் கூர்ஸ் தலைமை செயல் அதிகாரி காவின் ஹாட்டர்ஸ்லே, ‘துப்பாக்கிச்சூடு நடத்திய வரும் எங்கள் ஊழியர்தான். இந்த மோசமான சம்பவத்தில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த 5 ஊழியர்களை இழந்து விட்டோம்,’ என்று  இ-மெயில் மூலமாக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை