மக்களுக்கு வினியோகிக்கும் குடிநீர் சுத்தமாக இருக்குதா? விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கலாமே!

தினமலர்  தினமலர்
மக்களுக்கு வினியோகிக்கும் குடிநீர் சுத்தமாக இருக்குதா? விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கலாமே!

அவிநாசி:அவிநாசி சுற்றுப்புற பகுதிகளில், காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.கடந்த நவம்பர் துவங்கி, அவிநாசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், டெங்கு, காய்ச்சல் பாதிப்பால் பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
காய்ச்சலை கட்டுக்குள் வைக்க, பொது சுகாதார பிரிவினர், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.தற்போது காலநிலை மாறி, வெயில் துவங்கியுள்ள நிலையில், காய்ச்சல் படிப்படியாகக் குறைந்திருக்கிறது.
இருப்பினும், ஆங்காங்கே காய்ச்சல் பாதிப்பு தென்படுகிறது.இந்நிலையில், 'சுத்திகரிக்கப்படாத குடிநீரை பருகுவதுதான் உடல் உபாதைக்கு காரணம்' என, பொது சுகாதார துறையினர் கண்டறிந்தனர்.எனவே, 'உள்ளாட்சி நிர்வாகத்தினர், வீடுகளுக்கு வினியோகிக்கும் தண்ணீரை குளோரினேஷன் செய்து வழங்க வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, சுகாதாரப் பிரிவினர் கூறுகையில், 'அவிநாசி, சேவூர் உட்பட பல பகுதியில், பவானி, சிறுமுகை ஆற்றிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.அங்குள்ள நீரேற்ற நிலையங்களில், குடிநீர் வடிகால் வாரியத்தினர் தண்ணீரை குளோரினேஷன் செய்து வினியோகிக்கின்றனர்.
இருப்பினும், ஊராட்சி, பேருராட்சிகள், ஆழ்துளை கிணறு மூலம் வினியோகிக்கும் தண்ணீர் குளோரினேஷன் செய்யப்படுவதில்லை. எனவே, அந்த தண்ணீரையும் குளோரினேஷன் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஆனால், இந்தப்பணி உரிய முறையில், கண்காணிக்கப்படாததால், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், வினியோகிக்கப்படும் தண்ணீரின் சுத்திகரிப்பு தன்மையை, உறுதிபடுத்த முடிவதில்லை. எனவே, குளோரின் அளவை சரி பார்க்கும் பயிற்சியை, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

மூலக்கதை