'கழக்காத்தா சந்தன மேரா வெகு வேகா பூத்திருக்கு!

தினமலர்  தினமலர்
கழக்காத்தா சந்தன மேரா வெகு வேகா பூத்திருக்கு!

''சிறு வயதில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்ததாலோ என்னவோ, கடவுள் எனக்கு இப்போது இந்த வாய்ப்பையும் புகழையும் கொடுத்திருக்கிறார்,'' என்று கூறிச் சிரிக்கிறார், 60 வயது நஞ்சியம்மாள்.
தமிழக எல்லையில், கேரளாவின் அட்டப்பாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள நாக்குபதி பிரிவில், வசிக்கும் நஞ்சியம்மாள் பாடிய பாடல்தான், இப்போது கேரளத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும், 'ஹிட்' பாடலாகியிருக்கிறது.பிருத்விராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளியான, 'அய்யப்பனும் கோஷியும்' என்ற மலையாளப் படத்தில், இவர் பாடிய டைட்டில் பாடல், யூடியூபில் முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்து விடும் என்கின்றனர் இசை பிரியர்கள்.
இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த நஞ்சியம்மாள், 15 ஆண்டுகளாகவே, ஆசாத் கலா சமிதி அமைப்பின் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, பாடல்களை பாடியுள்ளார்.எனினும், இந்த படத்தில் அவர் பாடிய, 'கழக்காத்தா சந்தன மேரா வெகு வேகா பூத்திருக்கு... பூ பறிக்கா போகிலாமோ விமானத்தே பாக்கிலாமோ' என்ற, இருளர் பழங்குடி மொழிப்பாடல், கேட்பவர் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டு விட்டது. ''முதல் பாடல் பாடி முடித்தபோது, எனக்கு கண்ணீரே வந்து விட்டது. பேசவே முடியவில்லை. எனக்கு மட்டும்தான் என்று நினைத்தேன். வெளியில் வந்தபோதுதான் தெரிந்தது. இயக்குனர், இசை அமைப்பாளர் கூட கண்ணீருடன் நின்றிருந்தனர்.
எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது? என்ற கேள்விக்கு, ''நான் வீட்டையும், காட்டையும் விட்டு வெளியில் எங்கும் சென்றதில்லை. என் கணவர் சொன்னதன் பேரில், ஆசாத் கலா சமிதிக்கு சென்றேன். அங்கு நான் பாடிய பாடல், அங்கிருந்த அனைவருக்கும் பிடித்துப் போய் விட்டது. அதன்பிறகு தான் என்னை வெவ்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று பாட வைத்தனர்
.''சினிமா நடிகர்களில், எம்.ஜி.ஆர்., சிவாஜி, கே.ஆர்.விஜயா, சவுகார் ஜானகி தெரியும். அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர்., படமென்றால், ஓடோடிச் சென்று பார்ப்போம். வேறு எந்த நடிகரையும் தெரியாது. மோகன்லாலை கூட இப்போதுதான் பார்த்தேன்,'' என்கிறார்.
இந்த வயதில் இப்படி ஒரு வாய்ப்பு வரும் என எதிர்பார்த்தீர்களா...? என்று கேட்டதற்கு, ''எதிர்பார்க்கவில்லை. நான் சிறு வயதில் நிறைய நாட்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். ரோட்டில் துாங்கியிருக்கிறேன். அப்படி கஷ்டப்பட்டதால்தான், கடவுள் இந்த வயதில் எனக்கு இப்படி வாய்ப்பையும், புகழையும் கொடுத்திருக்கிறார்,'' என்கிறார், நஞ்சியம்மாள்.

மூலக்கதை