வியாபாரிகள் கண்களில் கண்ணீரை வரவழைத்த துருக்கி வெங்காயம்

தினமலர்  தினமலர்
வியாபாரிகள் கண்களில் கண்ணீரை வரவழைத்த துருக்கி வெங்காயம்

கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டில் வாங்குவதற்கு ஆளின்றி, அழுகியதால், 72 டன் துருக்கி வெங்காயம் குப்பையில் கொட்டப்பட்டது.

மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால், வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் முதல் வெங்காயம் விலை, படிப்படியாக உயர்ந்தது.ஒரு கட்டத்தில், 1 கிலோ வெங்காயம், 200 ரூபாய்க்கு விற்பனையானது.விலை உயர்வை கட்டுப்படுத்த, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து, வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. சில மாதங்கள் உச்சத்தில் இருந்த வெங்காயத்தின் விலை, படிப்படியாக குறைந்தது.

தற்போது, 1 கிலோ வெங்காயம், 25 -- 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இதனால், துருக்கி வெங்காயம் வாங்க ஆளின்றி, தொடர்ந்து தேங்கி துளிர்த்ததுடன், அழுகிவிட்டது. இதையடுத்து, நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில், அழுகிய நிலையில், 72 டன் துருக்கி வெங்காயத்தை வியாபாரிகள் குப்பையில் கொட்டினர்.

விலை உயர்வால், பொதுமக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த வெங்காயம், தற்போது, வியாபாரிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்துஉள்ளது.

மூலக்கதை