பாஜ.வின் பழிவாங்கும் அரசியல் அம்பலமானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
பாஜ.வின் பழிவாங்கும் அரசியல் அம்பலமானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘மத்திய அமைச்சர், பா.ஜ நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரை இடமாற்றம் செய்யப்பட்டது மூலம், பாஜ.வின் பழிவாங்கும் அரசியல் அம்பலமாகி உள்ளது,’ என காங்கிரஸ்  குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர்  வழக்கை விசாரித்த தைரியமான நீதிபதி லோயா இடமாற்றம் செய்யப்படவில்லை. தன்னுடன்  பணியாற்றும் நண்பரின் மகள் திருமணத்துக்கு கடந்த 2014ம் ஆண்டு  சென்றபோது மாரடைப்பால் பலியானார்,’ என குறிப்பிட்டுள்ளார். இவருடைய மர்மச்சாவின் பின்னணியில் பாஜ இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதை  மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், ராகுல் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘நீதிபதி முரளிதரின் நள்ளிரவு இடமாற்ற சம்பவம் இந்த ஆட்சியில் அதிர்ச்சியளிக்கவில்லை. ஆனால் இது உண்மையிலேயே வருத்தமாகவும்  வெட்கமாகவும் இருக்கிறது. நேர்மையான நீதித்துறையின் மீது லட்சக்கணக்கான இந்தியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் நீதித்துறையை நசுக்குவதற்கும், மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்கும் முயற்சிக்கும் அரசின் செயல்  வருத்தமளிக்கிறது” என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘பா.ஜ அரசின் இந்த இடமாற்றம் மிக மோசமான அநீதி. பாஜ.வின் பழிவாங்கும் அரசியல் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது,’ என குறிப்பிட்டுள்ளார்.  

மூலக்கதை