வார்னர், பின்ச் அதிரடியில் ஆஸ்திரேலியா வெற்றி: டி20 தொடரை கைப்பற்றியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
வார்னர், பின்ச் அதிரடியில் ஆஸ்திரேலியா வெற்றி: டி20 தொடரை கைப்பற்றியது

கேப்டவுன்: ஓபனர்கள் வார்னர் மற்றும் பின்ச்சின் அதிரடியால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியை வென்று, தொடரையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்தன.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி கேப்டவுனில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

ஆனால் தென்னாப்பிரிக்க பவுலர்களால், ஆஸ்திரேலிய ஓபனர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச்சின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இருவரும் இணைந்து முதல் 11. 3 ஓவர்களில் 120 ரன்களை குவித்தனர்.

வார்னர் 37 பந்துகளில் 57 ரன்களை (5 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்தார்.

பின்ச் 37 பந்துகளில் 55 ரன்கள் (6 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.

மிடில் ஆர்டரில் இறங்கிய ஸ்டீவன் ஸ்மித், ஆட்டமிழக்காமல் தன் பங்கிற்கு 15 பந்துகளில் 30 ரன்களை குவித்தார். இதையடுத்து 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்தது.

வெற்றிக்கு தேவை 194 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை துவக்கிய தென்னாப்பிரிக்க அணி, முதல் ஓவரிலேயே ஆட்டம் கண்டது. அந்த அணியின் கேப்டன் குவின்டன் டி காக், 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார்.

ஸ்டார்க்கின் அடுத்த ஓவரில் டூ பிளெசிசும் (6 ரன்கள்) அவுட். வான் டேர் டுசேனும், ஹென்ரிக் கிளாசனும் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்தனர்.டுசேன் 24 ரன்களிலும், கிளாசன் 22 ரன்களிலும் ஆட்டமிழந்த பின்னர், அடுத்து வந்த அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 15. 3 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸி. பவுலர்களில் ஸ்டார்க் மற்றும் அகார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

97 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஆஸி.

பவுலர் ஸ்டார்க்கும், தொடர் நாயகனாக ஆரோன் பின்ச்சும் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29ம் தேதி பார்ல் நகரில் நடைபெற உள்ளது.

.

மூலக்கதை