கீழடியில் புகைப்பட கண்காட்சி: பார்வையாளர்கள் ஆர்வம்

தினமலர்  தினமலர்
கீழடியில் புகைப்பட கண்காட்சி: பார்வையாளர்கள் ஆர்வம்

திருப்புவனம் : கீழடியில் பார்வையாளர்கள் கண்டு ரசிக்க தொல்லியல் துறை மூலம் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வில் கிடைத்த வட்டப்பானை, சூதுபவளம், சங்கு அணிகலன்கள், உறைகிணறு உள்ளிட்டவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வின் முடிவில் தெரிய வந்ததையடுத்து கீழடிக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.6ம் கட்ட அகழாய்வை காண பலரும் வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை 6ம் கட்ட அகழாய்வில் பானை ஓடுகள் தவிர வேறு பொருட்கள் கிடைக்கவில்லை.

தொல்லியல் துறை சார்பில் கீழடியில் அகழாய்வு பொருட்கள் கண்காட்சி தொடங்கப்பட்டது. 4 மற்றும் 5 ம் கட்ட அகழாய்வில் கிடைத்த வட்டப்பானை, தண்ணீர் தொட்டி, சுடுமண் குழாய், வராஹி உருவம் பதித்த சூதுபவளம், நீண்ட தரைதளம், இரட்டைச்சுவர், அகழாய்வு பணியில் தொழிலாளர்கள், அகழாய்வு இயக்குனர் உதயசந்திரன் பார்வையிடும் காட்சி உள்ளிட்ட அனைத்து பதிவுகளும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மலேசியா, கோலாலம்பூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த தமிழர்கள் புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தனர்.கோலாலம்பூரைச் சேர்ந்த தாரா கூறுகையில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்த செய்திகளை கண்டு மிகுந்த ஆர்வத்துடன் கீழடி வந்தோம், தற்போது அகழாய்வு பணிகள் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளன.

4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்த புகைப்பட கண்காட்சியே ரசிக்கும் வகையில் உள்ளது. மதுரையில் கண்காட்சியில் ஒருசில பொருட்கள் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளோம், கீழடியிலேயே அந்த பொருட்களை காண்பது தான் நன்றாக இருக்கும், என்றார்.

மூலக்கதை