டெல்லியில் கலவரத்தை தூண்டியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு

தினகரன்  தினகரன்
டெல்லியில் கலவரத்தை தூண்டியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு

* மேலும் 2 பாஜ தலைவர் மீது நடவடிக்கை* ஐகோர்ட் அதிரடி உத்தரவுபுதுடெல்லி: டெல்லியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பா.ஜ மூத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக முடிவு எடுக்கும்படி  போலீசாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக, ஷாகீன் பாக் பகுதியில்  சிஏஏ.வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்திய இரு குழுக்கள் இடையே இரு தினங்களுக்கு முன், மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. துப்பாக்கியுடன் வந்த  வாலிபர், வானத்தை நோக்கி சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர், பஜன்புரா மற்றும் சாந்த் பாக் பகுதிகள் போர்களமாயின. லால் என்ற டெல்லி போலீஸ் தலைமை காவலர் இந்த கலவரத்தில் சிக்கி பலியானார்.  இந்த போராட்டத்தில் இதுவரை மொத்தம் 27 பேர் பலியாகி உள்ளனர். 48 போலீசார் உட்பட 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 70 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளனர். இதனால், டெல்லியின் பல பகுதிகளில் அடுத்த மாதம்  24ம் தேதி வரை போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த டெல்லியில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த கலவரம் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக  டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், ஒருவரும் கைது செய்யப்படாமல் இருந்தனர்.மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், பா.ஜ முத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோரின் வெறுப்பு பேச்சுக்களும் கலவரம் தூண்டப்பட்டதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. கடந்த மாதம் டெல்லி  சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘சிஏஏ.வுக்கு எதிராக போரட்டம் நடத்தும் தேசத் துரோகிகளை சுட்டு தள்ளுங்கள்,’ என பேசினார். இது குறித்து டெல்லி போலீசில், இந்திய இளைஞர்  காங்கிரஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. இதேபோல், பா.ஜ.வில் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ரா, வடகிழக்கு டெல்லியின் மஜ்பூர் பகுதியில் சவுக் பகுதியில் நடந்த சிஏஏ ஆதரவு போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். அங்கு இவர் வெறுப்பை தூண்டும்  வகையில் பேசியதை அடுத்துதான் கலவரம் வெடித்தது. டெல்லியில் சிஏஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை, போலீசார் 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்தவில்லை என்றால், நான் தெருவில் இறங்கி அப்புறப்படுத்வேன்’ என அவர்  எச்சரிக்கை விடுத்தார். பா.ஜ எம்.பி பர்வேஸ் வர்மா டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது பேசுகையில், ‘டெல்லியில் பா.ஜ ஆட்சிக்கு வந்தால், ஒரு மணி நேரத்தில் டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் விரட்டப்படுவர். மேலும், எனது தொகுதியில் அரசு நிலத்தில்  கட்டப்பட்ட அனைத்து மசூதிகளையும் ஒரு மாதத்துக்குள் அகற்றுவோம்,’ என்றார். இவர்களின் வெறுப்பு பேச்சுதான் டெல்லியில் கலவரம் ஏற்பட்டதற்கு காரணம் என பல தரப்பினர் குற்றம்சாட்டினர். ஆனால், இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்த கலவரம் தொடர்பான  வழக்கி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:சிஏஏ போராட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, பர்வேஸ் மிஸ்ரா ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக முடிவு எடுத்து, அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.  கடந்த 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை போல், மீண்டும் ஒரு வன்முறையை நீதிமன்றத்தால் அனுமதிக்க  முடியாது. கலவரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினர்களுக்கு உதவுவதற்காக உதவி மையங்கள், 112 உதவி போன் எண் சேவைகள் வழங்க வேண்டும். 2 வார காலத்துக்கு, இரவு நேர மாஜிஸ்திரேட்டுகளை  பணியில் அமர்த்த வேண்டும். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் தங்கும் இடம் அளிக்க வேண்டும். போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சென்று நிலைமை ஆராய்ந்து  சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதையடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்  மற்றும் பா.ஜ தலைவர்கள் கமில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக போலீஸ் கமிஷனருடன்  உடனடியாக பேசி முடிவு எடுப்பதாக நீதிபதிகளிடம் டெல்லி சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன் உறுதி அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடக்கிறது. இந்நிலையில், அனுராக் தாகூர், பர்வேஸ்  வர்மா மீது வெறுப்பை தூண்டும் பேச்சுக்காக வழக்குப் பதிவு செய்யும்படி கோரி, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் தொடர்ந்த மற்ெறஆ வழக்கு, டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவர்கள்  மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் எதுவுமில்லை என டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை அடுத்த மாதம் 2ம் தேதிக்கு நீதிபதி விஷால் பகுஜா ஒத்திவைத்தார்.கலவர பகுதியில் முதல்வர், துணை முதல்வர் ஆய்வுடெல்லி உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் சீலாம்பூர், சிவ்விகார் உட்பட கலவரம் நடந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கலவரம் தொடர்பாக டெல்லி  போலீசாரும், சிசிடிவி வீடியோ காட்சிகளை பார்த்து 106 பேரை கைது செய்தனர். கலவரம் தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றமும் கண்டனம்முன்னாள் தகவல் ஆணையர் வாஜாஹத் ஹபிபுல்லா, பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் மற்றும் சமூக ஆர்வலர் பகதூர் அப்பாஸ் நக்வி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ’டெல்லியில்  குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டிருந்தது. இதேபோல், டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி  வரும் மக்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே.கவுல், கே.எம்.ஜோசப்  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜராகி கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா செய்த வாதத்தில், “டெல்லியில் நடந்து வரும்  வன்முறை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வர, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், டெல்லி போலீஸ் கமிஷனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்  அனுப்பியுள்ளது” என்றார். இதையடுத்து, மனுதாரர்கள் தரப்பு வாதத்தில், “குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் துப்பாக்கிச்சூடு, தடியடி, உயிரிழப்புகள் போன்ற பதற்றமான சம்பங்கள் நடந்துள்ளன.  வன்முறையை கட்டுப்படுத்த அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அதனால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” என வாதிட்டனர்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:வன்முறை சம்பவத்தால் போலீசார் இறந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தான் நாங்களும் கேட்கிறோம், ஏன் இந்த அளவிற்கு நிலமையை கைமீறிப்போக விட்டீர்கள்? அதற்கான காரணம் என்ன என்பதை  தெளிவிப்படுத்துங்கள். டெல்லியை பொருத்தமட்டில் நடந்த வன்முறை சம்பவம் என்பது துரதிஷ்டவசமானது. இதில் சட்டவிதிகளின் அடிப்படையில் வன்முறைக்கு எதிராக அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இது டெல்லிக்கு  மட்டுமில்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, டெல்லி வன்முறை சம்பவத்திற்கு முழுமையாக போலீசாரின் மெத்தனப்போக்கு மற்றும் அலட்சியம்தான் காரணம். அதனால்–்தான், இந்த அளவிற்கு பெரியதாக பிரச்னை  உருகியுள்ளது. ஆரம்பத்திலேயே இதனை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். இது மிகவும் கண்டனத்துக்குரியது. இதை தொடர்ந்தாவது, வன்முறைக்கு எதிராக காவல் துறை துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இனியும் வன்முறை  சம்பவங்கள் நடப்பதை நீதிமன்றம் ஏற்காது. இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. விசாரணையை வரும் மார்ச் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை