நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்! கலெக்டரிடம் விவசாயிகள் புகார்

தினமலர்  தினமலர்
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்! கலெக்டரிடம் விவசாயிகள் புகார்

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், 'நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.45 லஞ்சம் பெறுகிறார்கள்' என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

கலெக்டர் வினய் தலைமையிலான இக்கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

மணவாள கண்ணன்: நெல் கொள்முதல் நிலையங்கள் முடங்கிவிட்டன. முதல் முறை கொள்முதல் செய்த மூடைகளே இன்னும் கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. வயலில் அறுத்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. வீணாகும் நிலை உள்ளது.

திருப்பதி: நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.45 லஞ்சம் பெறுகின்றனர். கொள்முதல் செய்த நெல்லுக்கு ஒரு மாதமாக பணமும் வரவில்லை.

நுகர்பொருள் வாணி பக்கழக மண்டல மேலாளர் புகாரி: 45 ஆக இருந்த கொள்முதல் நிலையங்கள் 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கு தகுந்த அளவு லாரி, வேலை ஆட்கள், லோடுமேன்கள் இல்லை. ஒரு வாரத்தில் நிலைமையை சரி செய்துவிடுவேன். உடனுக்குடன் பணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

ராமன்: உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி வட்டார பகுதி முன்னேற்றத்திற்கு உசிலம்பட்டியில் 75 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமையும் என 2015ம் ஆண்டில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதுவரை நடவடிக்கை இல்லை. அங்கு அரசு புறம்போக்கு நிலம் 35 ஏக்கர் உள்ளது. எஞ்சிய நிலத்தை கையகப்படுத்தி பணியை துவங்க வேண்டும்.

கலெக்டர்: இதற்கு தனிகவனம் செலுத்தப்படும். குழு அமைத்து பணி துவங்கப்படும், என்றார்.இது தவிர, அனைத்து ஒன்றியங்களுக்கும் சம அளவு சோலார் மோட்டார்கள் ஒதுக்க வேண்டும். விவசாயிகள் அல்லாதோருக்கு கிஷான் கார்டு கொடுக்கக்கூடாது. உள்ளாட்சிகளில் நுண்ணுரம் தயாரிக்கும் உபகரணங்கள் வாங்கியும் உரம் தயாரிக்கவில்லை. இப்பணியை உடனே மேற்கொண்டு விவசாயத்திற்கு உரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்

கண்ணீர் விட்ட அதிகாரி:

கூட்டத்தில் கொள்முதல் நிலையங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை விவசாயிகள் முன்வைத்தனர். நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல முதுநிலை மேலாளர் புகாரி பதில் அளித்தார். ஒரு கட்டத்தில் பலரும் சரமாரியாக கேள்விகளை தொடுத்ததால் திக்குமுக்காடிய அவர், 'எங்களிடம் ஊழியர்கள் குறைவாக உள்ளனர். நான் காலை 8:30 முதல் இரவு 10:30 வரை பணி செய்கிறேன். இருந்தும் சில தாமதம் ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் உங்கள் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்' என தழுதழுத்த குரலில் கண்ணீர் மல்க பதிலளித்தார்.

மூலக்கதை