தேர்தல் 'பராக்!' நகர் உள்ளாட்சியில் அதிகாரி ஆயத்தம் ...ஓட்டுச்சாவடி வரைவு பட்டியல் வெளியீடு

தினமலர்  தினமலர்
தேர்தல் பராக்! நகர் உள்ளாட்சியில் அதிகாரி ஆயத்தம் ...ஓட்டுச்சாவடி வரைவு பட்டியல் வெளியீடு

திருப்பூர் : உள்ளாட்சி தேர்தலுக்காக, நகர உள்ளாட்சிகளில், 1,117 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி; தாராபுரம், உடுமலை, பல்லடம், வெள்ளகோவில், காங்கயம் நகராட்சிகள்; 16 பேரூராட்சிகள், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. மாநகராட்சியில், 60 வார்டுகள்; நகராட்சிகளில், 120 வார்டுகள்; 16 பேரூராட்சிகளில், 246 வார்டுகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம், 426 பதவிகளுக்கு, நகர உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்களில் இருந்தே தேர்வு செய்யப்படுகின்றனர்; நேரடி தேர்தல் கிடையாது.உள்ளாட்சி தேர்தலுக்காக, வெளிமாவட்டங்களில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வந்து, முதல்கட்ட சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ளது.

நல்லுார் மாநகராட்சி மண்டல அலுவலகம், நஞ்சப்பா பள்ளி, திருப்பூர் மற்றும் பல்லடம் ஒன்றியங்களில், போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 2,687 'கன்ட்ரோல் யூனிட்'களும், 5,400 'பேலட் யூனிட்'களும், தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.கலெக்டர் விஜய கார்த்திகேயன் பேசியதாவது:திருப்பூர் மாநகராட்சி வாக்காளர் எண்ணிக்கை, ஆறு லட்சத்து, 67 ஆயிரத்த, 251 ஆக இருந்தது; 16 ஆயிரத்து, 051 வாக்காளர் சேர்ந்து, தற்போது, ஆறு லட்சத்து, 83 ஆயிரத்து, 302 வாக்காளர் உள்ளனர். புதிய வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஓட்டுச்சாவடி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாநகராாட்சியில், 597 ஓட்டுச்சாவடிகள் இருந்தது, 603 ஆக உயர்ந்துள்ளது.மாவட்டத்தில் உள்ள, நகர உள்ளாட்சிகளில் மொத்தம், 1117 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு, அதன் நகல் வழங்கப்படும். ஓட்டுச்சாவடிகள் குறித்து, மூன்று நாட்களுக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். வரும், 2ம் தேதி ஓட்டுச்சாவடிகளின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.'வெளிப்படையா நடத்துங்க!'கூட்டத்தில், அரசியல் கட்சியினர் பேசியதாவது:கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள், வெளிப்படையாக இல்லை. தேர்தல் குளறுபடி தொடர்பான யாரிடம் கேட்டும் பதில் கிடைக்கவில்லை.யாரை கேட்டாலும், கலெக்டரை கேளுங்கள் என்று ஒரே பதில்தான் கிடைத்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், இதுபோன்ற நிலை இருக்க கூடாது. தேர்தல் தொடர்பான விவரங்களை, அதிகாரிகளுக்கு முதலில் பயிற்றுவிக்க வேண்டும்.கட்சியினர், வாக்காளரின் குழப்பங்களை தீர்க்கும் அளவுக்கு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு உட்பட, அனைத்து தேர்தல் பணிகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

மூலக்கதை