2022! வடிவமைப்பில் மாற்றம் செய்தது மாநில நெடுஞ்சாலைத்துறை ..உக்கடம் சந்திப்பு மேம்பாலம்பாலம் பணி முடியும் ஆண்டு

தினமலர்  தினமலர்
2022! வடிவமைப்பில் மாற்றம் செய்தது மாநில நெடுஞ்சாலைத்துறை ..உக்கடம் சந்திப்பு மேம்பாலம்பாலம் பணி முடியும் ஆண்டு

கோவை : உக்கடம் மேம்பாலத்தை ஆத்துப்பாலம் வரை நீட்டிப்பது; பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வடிவமைப்பு மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், பாலம் வேலை முழுமையாக முடிய, 2022 ஆகி விடும் என்கின்றனர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

கோவை, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் வரும் வாகனங்களும், நகர் பகுதியில் இருந்து இவ்விரு ரோட்டுக்கும் செல்லும் வாகனங்களும் ஆத்துப்பாலத்தில் சந்திப்பதால், தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்ட, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.இந்த ரோடு, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமிருப்பதால், தடையின்மை சான்று கேட்டு, விண்ணப்பித்தது. அதற்கு, ஆத்துப்பாலம் அருகே சுங்கச்சாவடி இருப்பதால், கரும்புக்கடை வரை மட்டுமே அனுமதி தர முடியும். சுங்கச்சாவடிக்கான அவகாசம் முடிந்ததும், பாலத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என கூறி, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அனுமதி கொடுத்தது.

அதன்படி, கரும்புக்கடை - உக்கடம் வரை, மேம்பாலம் கட்டப்படுகிறது. கடந்தாண்டு ஏப்., மாதம் வேலை துவங்கியது; இன்னும், 8 'டெக்' மற்றும் மழை நீர் வடிகால் கட்ட வேண்டியிருக்கிறது. மே மாதத்துக்குள் இப்பணி முடிந்து விடும் என்கின்றனர், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.தற்போதுஆத்துப்பாலம் வரை பாலம் நீட்டிக்கப்பட்டு, வாலாங்குளம் பைபாஸில் வருவோரும் பாலத்தில் ஏறும் வகையில், வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.

டவுன்ஹாலில் இருந்து வருவோர், நாஸ் தியேட்டர் முன்பிருந்து பாலத்தில் ஏறும் தளம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.ரோட்டின் மையத்தில் உள்ள கோவிலையும், ஏராளமான கடைகளையும் இடிக்க வேண்டியிருந்ததால், உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்குள் இரண்டு துாண்கள் கட்டி, பாலத்தில் ஏறும் வகையில் வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. இதற்கு ஒப்புதல் கேட்டு, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை கோப்பு அனுப்பியுள்ளது.

மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆத்துப்பாலம் சந்திப்பு, உக்கடம் சந்திப்பு மற்றும் பேரூர் பைபாஸில் இறங்கு தளம் மற்றும் பெரிய குளத்துக்குள் இருக்கும் உயர்மின் கோபுரங்களை இடம் மாற்றி, வாலாங்குளம் துணை மின் நிலையம் வரை, மின் புதை வடம் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், பணிகள் முடிவடைய, வரும், 2022ம் ஆண்டு இறுதியாகி விடும்' என்றனர்.உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் இரண்டு இடங்களில் துளையிட்டு, துாண்கள் அமைத்து, இறங்குதளம்/ ஏறு தளம் அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

உக்கடம் பெரிய குளத்தின் ஒரு பகுதியை மூடியே, பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், மண்ணின் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டும்.ஏனெனில், கழிவு நீர் பண்ணை வளாகத்தில், குடிசை மாற்று வாரியத்தினர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, இரண்டு தளங்கள் மண்ணுக்குள் புதைந்தன. அதனால், மண் பரிசோதனை செய்து, உறுதித்தன்மையை பரிசோதித்த பின், செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், பாலத்தின் தாங்கு துாண்கள் மண்ணுக்குள் புதையவோ அல்லது, கனரக வாகனங்கள் பயணிக்கும்போது, பாலம் சரிந்து விழவோ வாய்ப்பிருக்கிறது.

முன்னெச்சரிக்கையாக மண் பரிசோதனை செய்து, உறுதி தன்மையை உறுதி செய்து விட்டு, செயல்படுத்துவது நல்லது என்கின்றனர், நிபுணர்கள்.

மூலக்கதை