பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வக்கீல் சங்கம் கண்டனம்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வக்கீல் சங்கம் கண்டனம்

புதுடெல்லி: பிரதமர் மோடியை சர்வதேச நீதித்துறை மாநாட்டில் புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு வக்கீல்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 22ம் தேதி சர்வதேச நீதித்துறை மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பிரதமர் மோடியை வெகுவாக புகழ்ந்து பேசினார். அப்போது, `பிரதமர் மோடி சர்வதேச தொலைநோக்கு பார்வை கொண்டவர். பல்துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர். இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புறவு கொண்ட நாடாக அவரது தலைமையில் திகழ்கிறது’ என்று அருண் மிஸ்ரா பேசினார். உச்ச நீதிமன்றத்தின் 3 வது மூத்த நீதிபதியாக உள்ள ஒருவர் இவ்வாறு பிரதமரை புகழ்ந்து பேசியதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், பிரதமரை புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு இந்திய வக்கீல்கள் சங்கம் (பார் அசோஷியேஷன்) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் லலித் பாசின் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு நிர்வாகத்துடன் குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றுவது நீதிபதிகளின் கடமையாகும். பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ள நீதிபதி அருண் மிஸ்ராவின் இத்தகைய பாராட்டு கண்டனத்துக்குரியதுடன் கவலையளிப்பதாகவும் உள்ளது. எனவே அருண் மிஸ்ராவுக்கு பார் அசோசியேஷன் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான நீதித்துறையை பாதிக்கும். மேலும் நீதிபதிகள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

மூலக்கதை