சீனாவில் பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் ஈரான், தென் கொரியாவில் கொரோனா கோரதாண்டவம்: விளைவு படுபயங்கரமாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுக்குழு எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
சீனாவில் பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் ஈரான், தென் கொரியாவில் கொரோனா கோரதாண்டவம்: விளைவு படுபயங்கரமாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுக்குழு எச்சரிக்கை

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்புகள் சீனாவில் குறையத் தொடங்கி உள்ள நிலையில், ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் அதன் கோரதாண்டவம் தொடங்கி உள்ளது. ஈரானில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் அங்கு பாதிப்பு வெகுவாகக் குறையத் தொடங்கி உள்ளது. அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, வைரஸ் பாதிப்பால் நேற்று 52 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் புதிதாக வைரஸ் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 406 ஆக குறைந்துள்ளது. இதுவரை 78,064 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக பாதிப்புள்ளோர் எண்ணிக்கை 8,752ல் இருந்து 374 ஆகவும் சரிந்துள்ளது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. இதுவரை சிகிச்சை மூலம் குணமடைந்து 29,745 பேர் வீடு திரும்பி உள்ளனர். ஹாங்காங்கில் 2 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்காவ்வில் 10, தைவானில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வுகானிலும் வைரஸ் பரவல் வெகுவாக குறைந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், சீனா தவிர்த்து மற்ற நாடுகளில் வைரஸ் வேகமாக பரவி புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தென் கொரியாவில் நேற்று மட்டும் 115 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வைரசால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,261 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக டியாகு நகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. டியாகு அருகே உள்ள அமெரிக்க ராணுவ முகாமில் 23 வயது வீரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட முதல் அமெரிக்க வீரரான இவருக்கு ராணுவ மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதே போல, ஈரானில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி  நேற்று 4 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 44 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இத்தாலியிலும் கொரோனா வேகமாக பரவுவதால் ஐரோப்பிய யூனியனில் பீதி ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையே, ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து வெளியேறிய 12க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா பாதிப்பில்லை என சமீபத்தில் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள் தற்போது வைரஸ் தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை அக்கப்பலில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், சீனாவின் வுகானில் இருந்து திரும்பிய உலக சுகாதார அமைப்பின் மருத்துவ ஆய்வுக்குழு, தனது ஆய்வு குறித்த தகவல்களை நேற்று வெளியிட்டது. அக்குழுவின் தலைவர் டாக்டர் புரூஸ் அயல்வார்டு அளித்த பேட்டியில், ‘‘புதிய கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்போதே கணிக்க முடியாது. அதில் பல விடை தெரியாத மர்மங்கள் இருப்பதால் தான் சீனாவிலேயே இறப்பு விகிதம் மாறுபடுவதற்கான காரணத்தையும் அறிய முடியவில்லை. சீனாவில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் அங்கு பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனாலும் உலகின் மற்ற நாடுகள் கொரோனாவை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலையில் இல்லை. ஆரம்ப கட்டத்திலேயே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அதன் விளைவு படுபயங்கரமாக இருக்கும்’’ என எச்சரித்துள்ளார்.டெல்லி வன்முறை; அமெரிக்க எம்பிக்கள் கவலைடெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த சம்பவத்துக்கு அமெரிக்க எம்பி.க்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து எம்பி பிரமிளா ஜெயபால் கூறுகையில், “இந்தியாவில் இருக்கும் மதசகிப்பின்மையானது மிகவும் பயங்கரமானது. பிரிவினை மற்றும் பாகுபாட்டை ஜனநாயக கட்சி ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. மத சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சட்டங்களை ஊக்குவிக்க கூடாது. உலகம் இதை அனைத்தையும் கவனித்து வருகின்றது” என பதிவிட்டுள்ளார். இதேபோல் எம்பி அலன் லோவன்தால் கூறுகையில், “இந்தியாவில் மனித உரிமைகளுக்கு எதிராக உள்ள அச்சுறுத்தல் குறித்து கண்டிப்பாக நாம் பேசவேண்டும்” என்றார். ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் மற்றும் செனட்டர் எலிசபெத் வாரன் கூறுகையில், ‘‘இந்தியா போன்ற ஜனநாயக கூட்டாளிகளுடன் நமது உறவை வலுப்படுத்துவது முக்கியம். ஆனால் அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது,” என்றார். எம்பி ரசிதா தாலிப் டிவிட்டரில், ’‘அதிபர் டிரம்ப் இந்தியாவை பார்வையிட்டார். முஸ்லிம்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக அமைதியாக இருக்கக் கூடாது,” என்று பதிவிட்டுள்ளார். சீனா புறப்பட்டது இந்திய விமானம்சீனாவின் வுகானில் இருந்து ஏற்கனவே 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 81 பேரை திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இதற்கான சீன அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து மருத்துவ நிவாரண பொருட்களுடன் விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. நட்பு அடிப்படையில் சீனாவுக்கு மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும், அந்த விமானத்தில் 81 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, ஜப்பான் கப்பலில் உள்ள 138 இந்தியர்களையும் மீட்க இந்திய விமானம் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை