மலேசிய அரசியலில் அதிரடி திருப்பம்: மீண்டும் பிரதமராக மகாதீர் திடீர் முடிவு

தினகரன்  தினகரன்
மலேசிய அரசியலில் அதிரடி திருப்பம்: மீண்டும் பிரதமராக மகாதீர் திடீர் முடிவு

கோலாலம்பூர்: மலேசிய  பிரதமராக கடந்த 1981ம் ஆண்டில் இருந்து பதவியில் இருந்த மகாதீர்  முகமது  (94), 2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர்,  2018ம்  ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று `நம்பிக்கை ஒப்பந்தம்’  என்ற  பெயரில் அன்வர் இப்ராகிம் தலைமையிலான எதிர்க்கட்சியுடன் கூட்டணி  அமைத்து  மீண்டும் பிரதமரானார்.  இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்ட  மகாதீர், தனது பதவியை நவம்பருக்கு பின்னர் அன்வருக்கு விட்டு கொடுப்பதாக கூறியிருந்தார். இது தொடர்பாக கடந்த வாரம் கூட்டணி  கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கடந்த திங்களன்று அவர்  தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது, அன்வர் இப்ராகிம் பதவிக்கு  வருவதை தடுக்கவும்,  புதிய கூட்டணியை அமைப்பதற்காகவும் மகாதீர் செய்த வியூகமாக கருதப்பட்டது.இந்நிலையில், பதவியை திடீரென ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு  தொலைக்காட்சி வாயிலாக மகாதீர் நேற்று ஆற்றிய உரையில், `தற்போதைய சூழலில் கட்சி அரசியலை  ஒதுக்கி விட வேண்டும். மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி செய்வேன். ஆனால், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை ஏமாற்றிய ஐக்கிய மலேசிய தேசிய கட்சியுடன்  இனி கூட்டணி அமைக்க மாட்டேன். அதனால்தான், பதவியை ராஜினாமா செய்தேன்’ என்று  தெரிவித்தார். மகாதீரின் இந்த முடிவால், மலேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘நான்தான் பிரதமர்’ எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம்  விடுத்துள்ள அறிக்கையில், `நம்பிக்கை ஒப்பந்தம் கூட்டணியில் உள்ள மூன்று  முக்கிய கட்சிகளைச் சேர்ந்த எம்பி.க்கள் அடுத்த பிரதமர் வேட்பாளராக என்னை  தேர்ந்தெடுத்து உள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை