கொரோனா வைரசால் ஆபரண ஏற்றுமதி மேலும் பாதிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா வைரசால் ஆபரண ஏற்றுமதி மேலும் பாதிப்பு

புதுடெல்லி:  சீனாவில் தீவிரம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி ஸ்தம்பித்துள்ளது. ஏற்றுமதி பாதிக்கப்பட்ட துறைகளில் ஆபரண உற்பத்தி துறையும் ஒன்று.  நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் புள்ளிவிவரப்படி, நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் ஆபரண ஏற்றுமதி 9.17 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 296.64 கோடி டாலர் மதிப்பிலான நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதம் இந்த ஏற்றுமதி மதிப்பு 326.58 கோடி டாலராக இருந்தது.  இதுகுறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தரப்பினர் கூறுகையில், கொரோனா வைரசால் சீனா மட்டுமின்றி, ஜப்பான், தென் கொரியா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடைபெற இருந்த நகை கண்காட்சி மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய நகைத்துறைக்கு பெரிய அளவில் ஆர்டர் கிடைக்கும் வாய்ப்பு தள்ளிப்போயுள்ளது. பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் ஏற்றுமதி ஏற்கெனவே சரிந்துள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்றுமதி மேலும் 5 சதவீதம் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

மூலக்கதை