மூணாறில் அடிப்படை வசதியில்லாத தீயணைப்பு நிலையம்

தினகரன்  தினகரன்
மூணாறில் அடிப்படை வசதியில்லாத தீயணைப்பு நிலையம்

* விரிசல் விழுந்த கட்டிடங்கள் * ஒரே அறையில் பலர் தங்கும் அவலம்* மழைநீர் கசியும் மேற்கூரை * புதிய கட்டிடம் கட்டுவது எப்போதுமூணாறு: மூணாறில் தீயணைப்பு நிலையத்தில் போதிய அடிப்படை வசதியின்றி, தீயணைப்பு வீரர்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறை அடுத்து 5 கீமீ தொலைவில் நல்லதண்ணி என்னும் இடத்தில் கேரள அரசின் தீயணைப்பு அலுவலகம் உள்ளது. இங்கு 30 தீயணைப்பு ஊழியர்களும், 6 தீயணைக்கும் வாகனங்களும் உள்ளன. இந்த தீயணைப்பு நிலையம் மூலம் மூணாறில் உள்ள 13 பஞ்சாயத்துகளில் ஏற்படும் தீ விபத்துகள் அணைக்கப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீயணைப்பு நிலையத்தில் தற்போது அடிப்படை வசதியில்லை. கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. மழை காலங்களில் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால், அறையில் தங்கியிருக்கும் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். மூணாறில் கனமழை காலங்களில் மண்சரிவு, மின்கம்பங்கள், மரங்கள் விழுகின்றன. இந்த சமயங்களில் மூணாறு தீயணைப்பு ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து, மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் ஓய்வு எடுக்க போதிய அறை வசதியில்லை. ஒரு அறையில் 30 பேர் தங்க வேண்டிய அவலநிலை உள்ளது. மழையில் நனைந்த உடைகளை உலரவைக்க வசதியில்லை. அலுவலகலத்தில் உள்ள மின்விளக்குகள் வழியாக மழைநீர் கசிவதால், அவைகளை பிளாஸ்டிக் கவர் மூலம் மூடி வைத்துள்ளனர். சமையல் அறை மற்றும் குளியல் அறையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மின்வயர்கள் அறுந்து விழும் நிலையில் உள்ளது. மழை காலங்களில் அறைகளில் தண்ணீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர்.காலம் தாழ்த்தும் அதிகாரிகள்:பழமையான இந்த நிலைய கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை இல்லை. தீயணைப்பு நிலையத்தை மாற்றி அமைக்க, கடந்த 2000ம் ஆண்டில் மூணாறு பஞ்சாயத்து அலுவலகம் பகுதியில் ஒன்றரை ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் கட்டப்படவில்லை. மேலும் 2006ல் மீண்டும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறப்படுகிறது. மூணாறில் இயற்கை பாதிப்புகளிலிருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்கும் தீயணைப்பு வீரர்கள் தங்கும் நிலையம் அடிப்படை வசதியில்லாமல் இருப்பது வேதனையாகும் என தெரிவித்துள்ளனர்.இது குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘மூணாறு பஞ்சாயத்தில் உள்ள அதிகாரிகள், வருவாய்துறையினர் எங்களுடைய பாதுகாப்பிற்க்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் கேரள தீயணைப்புத்துறை சங்கம் வாயிலாக போராடுவோம்’ என்றனர்.

மூலக்கதை