கிழக்கு டெல்லி வன்முறைகள் தூண்டுப்பட்டதோ அல்லது தனிச்சையானதோ..அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமை: ப.சிதம்பரம்

தினகரன்  தினகரன்
கிழக்கு டெல்லி வன்முறைகள் தூண்டுப்பட்டதோ அல்லது தனிச்சையானதோ..அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமை: ப.சிதம்பரம்

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தக் கலவரத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி தொடரப்பட்ட வழக்கை, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் வீட்டில் நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்காக போலீஸ், தன்வசமுள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்த வேண்டும். காயமடைந்தவர்கள் விவரம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இன்று பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், டெல்லி வன்முறை குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கிழக்கு டெல்லியில் நடைபெறும் வன்முறைகள் தூண்டுப்பட்டதோ அல்லது தனிச்சையானதோ சரி, அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமையாகும். இந்த வன்முறையானது திங்கட்கிழமை தொடங்கி தற்போது வரை வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது டெல்லி காவல்துறையின் மகத்தான தோல்வியை காட்டுகிறது. காயமடைந்தவர்களை முறையான மருத்துவமனைக்கு வெளியேற்றுவதை உறுதி செய்வதற்காக இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேற்று இரவு நள்ளிரவு விசாரணை நடத்த வேண்டியிருந்தது. அது டெல்லி காவல்துறையின் செயல்திறன் குறித்து என்ன கூறுகிறது? என கேள்வியெழுப்பியுள்ளார்.

மூலக்கதை