வடகிழக்கு டெல்லியில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு: வன்முறை காரணமாக சிபிஎஸ்இ அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வடகிழக்கு டெல்லியில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு: வன்முறை காரணமாக சிபிஎஸ்இ அறிவிப்பு

டெல்லி: டெல்லி வன்முறையின் எதிரொலியாக அதன் வடகிழக்குப் பகுதிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு சி.ஏ.ஏ. எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும், சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் தேர்வுகளைத் தள்ளி வைப்பது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு சிபிஎஸ்இ-க்கு அறிவுறுத்தியது. இதற்கிடையே 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு \'வெப் அப்ளிகேஷன்\' மற்றும் \'மீடியா\' தேர்வுகளும் இன்று நடைபெறுவதாக இருந்தன. இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் பொதுத் தேர்வுகளைத் தள்ளிவைப்பதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், கல்வி இயக்குநரகம் மற்றும் டெல்லி அரசின் வேண்டுகோளை முன்னிட்டும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அசெளகரியத்தைத் தவிர்க்க வேண்டியும் 26.02.2020 அன்று டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறினர். எனினும் மற்ற பகுதிகளில் தேர்வு வழக்கம் போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்தத் தேர்வு மையங்களில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்கள் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை