'டெல்லியில் அமைதி திரும்பிய பிறகே ஷாஹீன்பாக் வழக்கை விசாரிக்க முடியும்' : சட்ட நடவடிக்கைகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
டெல்லியில் அமைதி திரும்பிய பிறகே ஷாஹீன்பாக் வழக்கை விசாரிக்க முடியும் : சட்ட நடவடிக்கைகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி ஷாகீன்பாக் போராட்டம் தொடர்பான வழக்கில் தேவையில்லாத அம்சங்களை பற்றி விசாரிக்க போவதில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஷாஹீன்பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. வழக்கின் பின்னணி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் சுமார் 100 நாட்களாக முற்றுகை போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே, ஷாகீன் பாக் போராட்டத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், எனவே போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஷாகீன் பாக் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாத வகையில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.பேச்சுவார்த்தை குழு அறிக்கை தாக்கல் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், போக்குவரத்து வாகனங்கள் இயங்க வழிவகை செய்யும் வகையில் ஷாகீன் பாக் போராட்டக்கார்களை அப்புறப்படுத்த டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சமரசக்குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. மூத்த வக்கீல்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட இந்த குழுவினர் ஷாகீன்பாக் போராட்டக்காரர்களுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த போராட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு அங்கீகரித்து இருப்பதாகவும், ஆனால் இந்த போராட்டத்தால் மற்ற குடிமக்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என அறிவுறுத்தி இருப்பதாகவும் போராட்டக்காரர்களிடம் அவர்கள் எடுத்துரைத்தனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சாதனா ராமச்சந்திரன், சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்.  இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு ஒத்திவைப்பு இந்த வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு வந்த போது, ஷாஹீன்பாக் போராட்டம் தொடர்பான வழக்கில் தேவையில்லாத அம்சங்களை பற்றி விசாரிக்க போவதில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அத்துடன் டெல்லியில் அமைதி திரும்பிய பிறகே ஷாஹீன்பாக் வழக்கை விசாரிக்க முடியும் என்றும் பொது சாலைகளில் காலவரையின்றி போராட்டம் நடத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அத்துடன் இந்த வழக்கை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் , பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகானவும் போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மூலக்கதை