வேலூர் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் இடியும் அபாயத்தில் காட்சியளிக்கும் கட்டிடங்களை அகற்றுவது எப்போது?: தரம் உயர்த்துவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை

தினகரன்  தினகரன்
வேலூர் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் இடியும் அபாயத்தில் காட்சியளிக்கும் கட்டிடங்களை அகற்றுவது எப்போது?: தரம் உயர்த்துவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை

வேலூர்:  வேலூர் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் இடியும் அபாயத்தில் காட்சியளிக்கும் கட்டிடங்களை அகற்றி, மருத்துவமனையை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டது. இதனால், பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர விபத்து உள்ளிட்டவற்றில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.மேலும் மாவட்ட சித்த மருத்துவமனை, யுனானி, ேஹாமியோபதி மருத்துவமனைகளும், பிரசவ வார்டும் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் இயங்கி வருகிறது. இங்கேயும் ஏராளமானோர் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு, நவீன மருத்துவ வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் அமைக்க அனுமதி கேட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்காததால், கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் காட்சியளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடங்களை இடிக்க உடனடியாக அனுமதி வழங்குவதோடு, போதிய நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வேலூர் மாநகர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பென்ட்லண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடங்களில், சில கட்டிடங்கள் நல்ல நிலையில்தான் இருக்கிறது. இதில் ஒரு கட்டிடத்தில்தான் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. எனவே, குறிப்பிட்ட கட்டிடங்களை மட்டும் இடித்து அகற்றுவதற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. இதற்கிடையில், புறநோயாளிகளுக்காக புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுவிட்டது. இதுதவிர, மருத்துவமனையை தரம் உயர்த்த நிதி ஒதுக்கப்பட வேண்டியது அவசியம்’ என்றனர்.

மூலக்கதை