ஒண்ணுமே புரியலே...என்னான்னு தெரியலே * வீரர்கள் தேர்வு... கபில் காட்டம் | பெப்ரவரி 25, 2020

தினமலர்  தினமலர்
ஒண்ணுமே புரியலே...என்னான்னு தெரியலே * வீரர்கள் தேர்வு... கபில் காட்டம் | பெப்ரவரி 25, 2020

புதுடில்லி: ‘‘இந்திய அணியில் ஏன் அடிக்கடி மாற்றம் செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு டெஸ்டிலும் புதிய அணியை களமிறக்குகின்றனர்,’’ என, கபில் தேவ் தெரிவித்தார்.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 200 ரன்களை கூட தாண்டாத இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் 61, கூறியது:

நியூசிலாந்து அணி கடைசியாக பங்கேற்ற மூன்று ஒருநாள் மற்றும் முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை பாராட்டியே தீர வேண்டும். முதல் டெஸ்டில் இந்திய அணி செயல்பாடு குறித்து ஆராய்ந்தால், அணித் தேர்வு தான் காரணம் எனத் தெரிகிறது.

நமது அணியில் ஏன் இப்படி அடிக்கடி மாற்றம் செய்கின்றனர் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு டெஸ்டிலும் புதிய அணி தான் களமிறங்குகிறது. அணியில் யாருக்கும் நிலையான இடம் கிடைப்பது இல்லை. அணியில் நிலையில்லாமல் இருப்பதாக வீரர்கள் உணர்ந்தால், அது அவர்களின் ‘பார்மில்’ பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து திறமையாக செயல்பட முடியாது.

‘200’ முடியல

பேட்டிங் ஆர்டரில் பல முன்னணி வீரர்கள் இருந்தும், வெலிங்டன் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 200 ரன்களை இந்தியா தாண்ட முடியவில்லை. அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியவில்லை என்றால் எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும். போட்டிக்காக கூடுதல் கவனம் செலுத்தி, சரியான திட்டத்துடன் செயல்பட வேண்டும்.

நாங்கள் விளையாடிய காலத்துக்கும், இப்போது நடப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளன. சிறப்பான அணியை உருவாக்க வேண்டும் என விரும்பினால், வீரர்களுக்கு நம்பிக்கை தர வேண்டும். அதை விட்டுவிட்டு அதிகமான மாற்றங்கள் செய்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை. ஒரு பயனும் இல்லாமல் போய்விடும்.

இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

 

ராகுல் எங்கே

கபில் தேவ் கூறுகையில்,‘‘ ஒவ்வொரு வித கிரிக்கெட்டுக்கும் தனித்தனி வீரர்கள் வேண்டும் என அணி நிர்வாகம் நம்புகிறது. ஆனால் ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளில் சிறப்பான ‘பார்மில்’ உள்ள லோகேஷ் ராகுலை, டெஸ்ட் அணியில் சேர்க்காமல் வெளியே உட்கார வைத்துள்ளனர். இது சரியான முடிவாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஒரு வீரர் நல்ல ‘பார்மில்’ இருந்தால் அவரை தொடர்ந்து விளையாட அனுமதிக்க வேண்டும்,’’ என்றார்.

 

ஐந்து அரைசதம்

இந்திய வீரர் ராகுல் கடைசியாக களமிறங்கிய 10 இன்னிங்சில் 80, 19, 56, 57, 27, 39, 45, 88, 4 மற்றும் 112 என ஐந்து அரைசதம் அடித்துள்ளார். டெஸ்ட் அணியில் இடம் இல்லாததால், ரஞ்சி கோப்பை தொடர் அரையிறுதியில் கர்நாடக அணிக்காக விளையாட உள்ளார்.

மூலக்கதை