10 விக்., வீழ்த்தி காஷ்வீ சாதனை | பெப்ரவரி 25, 2020

தினமலர்  தினமலர்
10 விக்., வீழ்த்தி காஷ்வீ சாதனை | பெப்ரவரி 25, 2020

கடப்பா: ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டையும் வீழ்த்திய முதல் இந்திய நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார் காஷ்வீ.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பெண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் கோப்பை தொடர் நடக்கிறது. ஆந்திராவின் கடப்பாவில் நடந்த லீக் போட்டியில் அருணாச்சலப்பிரதேசம், சண்டிகர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் அணிக்கு கேப்டன் காஷ்வீ (49) கைகொடுக்க, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது.

‘வேகத்தில்’ மிரட்டல்

பின், களமிறங்கிய அருணாச்சல் அணிக்கு காஷ்வீ ‘வேகத்தில்’ அசத்தினார். மூன்றாவது ஓவரில் ஜொலித்த இவர், ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்த்தார். தொடர்ந்து எதிரணியை நிலைகுலைய செய்த காஷ்வீ, அனைத்து வீராங்கனைகளையும் வெளியேற்றினார். அருணாச்சல் அணி 8.5 ஓவரில் 25 ரன்களுக்கு சுருண்டு, 161 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 4.5 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே வழங்கிய காஷ்வீ, 10 விக்கெட்டையும் கைப்பற்றினார். பீல்டர் உதவி இல்லாமல் அனைத்து விக்கெட்டையும் (6 எல்.பி.டபிள்யு., 4 போல்டு) வீழ்த்தி வியப்பு தந்தார்.

முதல் நட்சத்திரம்

ஒரு நாள், ‘டுவென்டி–20’ அரங்கில் ஒரே இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் வீழ்த்திய முதல் இந்திய நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், முன்னாள் வீரர்களான கும்ளே (எதிர்–பாக்., டில்லி, 1999), தேபாஷிஸ் மொகந்தி (எதிர்– தென் மண்டலம், துலீப் டிராபி, 2001, அகார்தலா), ரெக்ஸ் சிங் (எதிர்– அருணாச்சல், கூச் பெஹார் டிராபி, 2018) என மூன்று இந்தியர்கள் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இவர்கள் அனைவரும் முதல் தர போட்டியில் மட்டுமே இந்த சாதனை படைத்திருந்தனர்.

மூலக்கதை