அமெரிக்காவுக்கே ஒரே ஒரு தலைநகர் இருக்கும் போது ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் வேண்டுமா? டிரம்பின் உதவியைக் கோரி நூதன ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவுக்கே ஒரே ஒரு தலைநகர் இருக்கும் போது ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் வேண்டுமா? டிரம்பின் உதவியைக் கோரி நூதன ஆர்ப்பாட்டம்

அமராவதி: அமெரிக்காவுக்கே ஒரே ஒரு தலைநகர் இருக்கும் போது ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி எதிர்ப்பாளர்கள், டிரம்ப் தலையிட்டு தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் செயல்படும் என அறிவிக்கப்பட்டதால், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது அமராவதியை ஆந்திர தலைநகராக உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அமராவதியோடு விசாகப்பட்டினம், கர்னூலையும் நிர்வாக நகரங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், 3 தலைநகரங்கள் அமைக்கும் அரசின் முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சியும், அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் மகள் இவாங்கா டிரம்ப், மருமகன் ஜார் குஷ்னர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அமராவதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள், இந்தியா வந்துள்ள டிரம்ப் தங்களையும் அமராவதியையும் காப்பாற்ற வேண்டும் என்று எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூலக்கதை