இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு

புதுடெல்லி: இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று மெலனியா டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் மகள் இவாங்கா டிரம்ப், மருமகன் ஜார் குஷ்னர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். மெலனியா டிரம்ப் இன்று தெற்கு டெல்லியில் உள்ள நானக்பூரா அரசுப் பள்ளிக்கு நேரடியாகச் சென்றார். அங்குள்ள பள்ளிக் குழந்தைகள் பூங்கொத்து அளித்து, ஆரத்தி எடுத்து மெலானியாவை உற்சாகமாக வரவேற்றனர். பள்ளியில் 2,299 மாணவர்கள், 80 ஆசிரியர்கள் மற்றும் 50 ஊழியர்கள் உள்ளனர். ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில், அரசுப் பள்ளிகளில் ஏசி வகுப்பறைகள், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை மெலனியா டிரம்ப் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முறையை நேரில் பார்வையிட்டு ரசித்த மெலனியா டிரம்ப், தொடர்ந்து மாணவர்கள் நடத்திய நடன நிகழ்ச்சியை கண்டுகளித்தார். இதையடுத்து, மாணவர்கள் மத்தியில் பேசிய மெலனியா டிரம்ப், இந்தியாவுக்கு நான் முதன்முறையாக வருகிறேன், மக்கள் மிகவும் அன்பாக வரவேற்றனர் என கூறியுள்ளார். இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி கூறிய மெலனியா, டெல்லி பள்ளியின் மகிழ்ச்சி வகுப்பு உத்வேகம் அளிக்கிறது. டெல்லியில் நடத்தப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது, என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, பள்ளி மாணவர்கள், அவர்கள் தயாரித்த மதுபனி ஓவியங்களை அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்பிற்கு பரிசளித்தனர்.

மூலக்கதை