டெல்லி வன்முறை இன்றும் 2ம் நாளாக தொடர்கிறது வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி வன்முறை இன்றும் 2ம் நாளாக தொடர்கிறது வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..பள்ளிகளுக்கு விடுமுறை

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அங்கு இன்றும் 2ம் நாளாக வன்முறை தொடர்கிறது. பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

பதட்டம் அதிகரித்துள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், ஷாஹீன் பாக் ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று வடகிழக்கு டெல்லி பகுதிகளான ஜாபராபாத் உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. அதேநேரம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணி, போராட்டக்காரர்கள் குழுவுடன் எதிர்பட்ட போது, கோகுல்புரி பகுதியில் திடீரென வன்முறை வெடித்தது.

பெரும் பதற்றம் ஏற்பட்டதால் அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் நேரம் போகப்போக நிலைமை மிகவும் மோசமானது.

கைகலப்பு, கல்வீச்சு எனப் பெரிதாகிய இந்தப் போராட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் போராட்டக்காரர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வன்முறையில் டெல்லி போலீஸ் ஏட்டு ரத்தன் லால் கொல்லப்பட்டார்.

வன்முறை தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில், தற்போதைய தகவலின்படி ஏட்டு உட்பட 7 பேர் பலியானதாகவும், 105க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், போராட்டங்களை கட்டுப்படுத்த முயன்ற துணை போலீஸ் கமிஷனர்கள் (டிசிபி) ஷஹ்தாரா, அமித் சர்மா மற்றும் ஏசிபி (கோகல்பூரி) அனுஜ்குமார் உட்பட 11 காவல்துறையினர் காயமடைந்தனர்.

இரண்டு சிஆர்பிஎப் போலீசாரும் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்த போலீஸ் ஏட்டு ரத்தன் லால் (42) ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர். பலியான 7 பேரில் ஆட்டோ ஓட்டுநரும் ஒருவர்.

வன்முறையால் ஒரு பெட்ரோல் பங்க், வாகனங்கள், 10 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் எரித்து கொளுத்தப்பட்டன. இதற்கிடையே டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட மத்திய உள்துறை செயலாளரான அஜய் குமார் பல்லா, ‘‘தற்போது மூத்த அதிகாரிகள் களத்தில் உள்ளனர்.

போதுமான அளவில் பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

ஆனால், டெல்லி வடகிழக்கு பகுதியில் சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவாளர்களுக்கு  இடையே மீண்டும் வன்முறை இன்று காலை ஆரம்பித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் தொடர் வன்முறையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், வன்முறையால் வடகிழக்கு டெல்லி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளை இன்று மூட டெல்லி அரசு  உத்தரவிட்டது.

வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில், செங்கல், கற்கள்  மற்றும் கண்ணாடித் துண்டுகள் குவிந்துள்ளன.

வடகிழக்கு டெல்லியில் வன்முறையை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலை  எண்: 59ல் வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

டெல்லி அமைச்சரும், பாபர்பூர் எம். எல். ஏ. வுமான கோபால் ராய் வெளியிட்ட  ட்விட் பதிவில், ‘எனது தொகுதியில் இரவில் கலவரம் தொடர்கிறது’ என்று கூறியுள்ளார். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்றிரவு  வெளியிட்ட ட்விட்டில், ‘பாபர்பூரில் கலவரக்காரர்கள் சுற்றித்  திரிகிறார்கள்; சில இடங்களில் தீ வைத்திருக்கிறார்கள்.

ஆனால் போலீஸ் படை  இல்லை. நான் போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கை தொடர்பு கொண்டபோது, அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை.

ஆளுநர் மற்றும் உள்துறை அமைச்சர் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தார். வடகிழக்கு பகுதி எம்எல்ஏக்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில்  ஈடுபட்டனர்.

அதேபோல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

டெல்லி வன்முறை சம்பவத்தின்போது, எட்டு முறை துப்பாக்கியால் சுட்டவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் யார் என்பது தெரியவந்துள்ளது. அவரின் பெயர் ஷாருக் என அடையாளம் காணப்பட்டது.

இந்த சம்பவத்தின் போது, அருகிலுள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் செல்போன் படங்கள் மூலம் அந்த நபர் அடையாளம் காணப்பட்டார்.

டெல்லியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலைவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

.

மூலக்கதை