கோபே பிரையன்ட், மகள் கியானா நினைவு நாள் அனுசரிப்பு: அவளது புன்னகை சூரிய ஒளியைபோல் இருந்தது...20 நிமிட உரையில் வனேஷா பிரையன்ட் உருக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோபே பிரையன்ட், மகள் கியானா நினைவு நாள் அனுசரிப்பு: அவளது புன்னகை சூரிய ஒளியைபோல் இருந்தது...20 நிமிட உரையில் வனேஷா பிரையன்ட் உருக்கம்

லாஸ் ஏஞ்சல்ஸ்:  அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட் (41), அவரது மகளான கியானாவுக்கு (13) கூடைப்பந்து பயிற்சி அளிக்க கடந்த ஜன. 26ல் தனியார் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.

பயிற்சியாளர்கள் உள்பட 7 பேர் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். காடுகள் நிறைந்த கலாபசாஸ் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிக் கொண்டது.

இச்சம்பவத்தில் கோபே பிரையன்ட், அவரது மகள் கியானா உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் கூடைப்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் கூடைப்பந்து வீரர் ஜோ பிரையன்ட்டின் மகனான கோபே பிரையன்ட் மனைவி வனேஷா தம்பதியருக்கு நடாலியா (17), கியானா, பியான்கா (3), காப்ரி (7 மாதம்) ஆகிய 4 பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த கணவர் மற்றும் மகளின் வாழ்க்கையை கவுரவிக்கும் விதமான கூட்டம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் நடந்தது.

அப்போது கூட்டத்தின் முன் கிட்டத்தட்ட 20 நிமிடம் பிரையன்ட் மனைவி வனேஷா உருக்கத்துடன் பேசியதாவது:

உலகெங்கிலும் இருந்து எனது குடும்பத்திற்காக அன்பையும், ஆதரவையும், பிரார்த்தனைகளையும் செய்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி. என் மகள் கியானா ஒரு அற்புதமான இனிமையான, மென்மையான ஆன்மா.

அவள் எப்போதும் சிந்தனையுடன் இருப்பாள். அவளுடைய காலை மற்றும் மாலை முத்தங்கள் எனக்குள் எத்தனை அன்பை பொழிந்தன.

ஒவ்வொரு நாளும் அவள் என்னை முத்தமிட்டதை நினைவு கொள்கிறேன். அவள் அப்பாவின் பெண்; ஆனால் அவள் அம்மாவை நேசிக்கிறாள் என்று எனக்குத் தெரியும்.

அவர் என் மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவராக இருந்தார். கடந்த ஆகஸ்டில், அவர் தனது அப்பாவுக்கு ஒரு அழகான பிறந்தநாள் கேக் தயாரித்தார்.

தனது அப்பாவைப் போலவே சிறந்த போட்டியாளராக வர ஆசைபட்டார். அவளது புன்னகை சூரிய ஒளியை போல் இருந்தது.

என் கணவர் கோபே பிரையன்ட் எப்போதும் என்னிடம் ‘அவள் நானே’ என்று சொல்லுவார். கோபேயும் கியானாவும் இயல்பாகவே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டனர்.

கோபே பிரையன்ட் ஒரு நல்ல மனிதர்; ஒரு சிறந்த விளையாட்டு வீரர்; ஒரு ஆசிரியர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் நிறுவனமான ஐலண்ட் எக்ஸ்பிரஸ் பைலட் அரா ஜார்ஜ் சோபயானின் கவனக்குறைவான பணியால் விபத்து நடந்துள்ளது.

அனைத்து சம்பவங்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனமே பொறுப்பு. அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை