சொகுசு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு: ஜப்பானுக்கான இந்திய தூதரகம் தகவல்

தினகரன்  தினகரன்
சொகுசு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு: ஜப்பானுக்கான இந்திய தூதரகம் தகவல்

டோக்கியோ: சொகுசு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானுக்கான இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது, சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத்தொடங்கிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசானது சீனாவை மட்டுமின்றி பல்வேறு நாடுகளையும் ஆட்டி படைத்து வருகின்றது. வுகானில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வருகின்றது. அதே நேரத்தில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வைரசினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள பயணிகளில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கப்பலில் இருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. நோய் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டப்பட்ட பயணிகள் கப்பலில் இருந்து கடந்த ஓரிரு நாட்களாக வெளியேற்றப்பட்டனர். நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கப்பல் ஊழியர்கள் மற்றும் பயணிகள் ஆயிரம் பேர் கப்பலிலேயே தொடர்ந்து தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், 138 இந்தியர்கள் பயணம் செய்த நிலையில் கொரோனா பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சொகுசு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்படாத இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய தூதரகம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாத இந்தியர்கள், மருத்துவ குழுவின் அனுமதியின் பேரில் தனி விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள், என தெரிவித்துள்ளது.

மூலக்கதை