ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு: டிரம்ப்-மோடி முக்கிய பேச்சு...டெல்லியில் காந்தி சமாதியில் மலர்தூவி அஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு: டிரம்ப்மோடி முக்கிய பேச்சு...டெல்லியில் காந்தி சமாதியில் மலர்தூவி அஞ்சலி

புதுடெல்லி: அமெரிக்க அதிபரின் 2 நாள் சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தி சமாதியில் டிரம்ப் அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து, மோடியுடன் வர்த்தகம், ராணுவம் ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருவரும் தனியாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்றிரவு முக்கிய பிரமுகர்களுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தார்.

அவரை பிரதமர் மோடி விமானநிலையம் சென்று வரவேற்றார். பின்னர் சபர்மதி ஆசிரமம் சென்றார்.

பின்னர் ஸ்டேடியத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து, ஆக்ராவில் தாஜ்மகாலை பார்வையிட்டார்.

நேற்று இரவு டெல்லியில் உள்ள ஐடிசி மயூரா நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, டெல்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை போலீசார் அதிகரித்துள்ளனர். இன்று (செவ்வாய்) முற்பகல் முதல் மாலை 4 மணி வரை, மோதி பாக், சாணக்யபுரி, இந்தியா கேட், ஐ. டி. ஓ, டெல்லிகேட், மத்திய மற்றும் புதுடெல்லி பகுதிகளில் போக்குவரத்து அவ்வப்போது மாற்றப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முதல் இன்றும் 2வது நாளாக வடகிழக்கு ெடல்லி பகுதியில் தொடர் வன்முறை நடப்பதால், இன்று மாஜ்பூர், பிரகாம்பூரில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது. குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தையடுத்து, சில குறிப்பிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், காலை 9. 45 மணி அளவில் டெல்லியில் உள்ள ஐடிசி மயூரா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மற்றும் குழுவினருடன் 6. 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை புரிந்தார். காலை 10 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்பு அணி வகுப்புகளை பார்வையிட்டார்.

அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து கவுரவித்தார். அப்போது பிரதமர் மோடியும் உடனிருந்தார்.

பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து 6. 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு, தனது மனைவி மெலானாவுடன் டிரம்ப் சென்றார். காந்தி சமாதியில் சில நிமிடங்கள் டிரம்ப், மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினார்.

அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐதராபாத் இல்லத்திற்கு முற்பகல் 11 மணி அளவில் வந்த டிரம்பை, பிரதமர் மோடி வரவேற்றார். அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

பாதுகாப்பு, வர்த்தகம் என சில முக்கியமான துறைகள் சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக வெளியுறவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, 12. 45 மணியளவில் பிரதமர் மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

முன்னதாக இரு தலைவர்களின் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையின்போது டிரம்பின் மனைவி மெலானா, டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள், ஆசியர்களிடம் கல்வி, கற்றல் முறை குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு பிரதமர் மோடி சார்பில், அமெரிக்க அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.

விருந்திற்கு பிறகு ஐடிசி மயூரா ஓட்டலுக்கு டிரம்ப் திரும்புகிறார். அங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் அமெரிக்க அதிபரை தனித்தனியாக சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இரவு 7. 30 மணியளவில் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வரும் டிரம்ப் குடும்பத்தினரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி வரவேற்று இரவு விருந்து வழங்குகின்றனர். இவ்விருந்தில் பிரதமர் மோடி மற்றும் சில முக்கிய அமைச்சர்கள், முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விருந்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிகிறது.

விருந்திற்கு பிறகு மீண்டும் ஓட்டலுக்கு வரும் அமெரிக்க அதிபர் இரவு 10 மணி அளவில் அமெரிக்காவிற்கு புறப்பட்டு செல்கிறார்.

.

மூலக்கதை