17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகள் காலி: தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு தேர்தல்...தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியீடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகள் காலி: தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு தேர்தல்...தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியீடு

புதுடெல்லி: தமிழகம்  உட்பட 17 மாநிலத்தில் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான  தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 17 மாநிலங்களுக்கு உட்பட்ட 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் அட்டவணை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிகாலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

அதன்படி, மாநிலம் வாரியாக (அடைப்புக் குறிக்குள் எம்பிக்கள் காலியிடம்) மகாராஷ்டிரா (7), ஒடிசா (4), தமிழ்நாடு (6), மேற்குவங்கம் (5) ஆகிய மாநிலங்களில் வரும் ஏப். 2ம் தேதி பதவியிடங்கள் காலியாகிறது.

ஆந்திரபிரதேசம் (4), தெலங்கானா (2), அசாம் (3), பீகார் (5), சட்டீஸ்கர் (2), குஜராத் (4), அரியானா (2), இமாச்சல பிரதேசம், மணிப்பூர் தலா (1), ஜார்க்கண்ட் (2), மத்திய பிரதேசம், ராஜஸ்தான் தலா (3) ஆகிய மாநிலங்களுக்கு ஏப். 4ம் தேதி பதவியிடங்கள் காலியாகிறது.

மேகாலயாவில் வரும் ஏப். 12ம் தேதி ஒரு பதவியிடம் காலியாகிறது.



தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி. கே. ரங்கராஜன் ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2ம் தேதி உடன் முடிவடைகிறது.


தமிழகத்தில் மார்ச் 26ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். மார்ச் 16ம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 18ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ேதர்தல் நடைமுறைகள் மார்ச் 30ம் தேதி முடிவுக்கு வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அடிப்படையில் நடைபெறும். அதன்படி ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறவேண்டும்.   இந்தக் குறிப்பிட்ட அளவு வாக்குகள், அதற்கென்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அளவீடு மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில், 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அதன்படி, ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம். எல். ஏக்களின் வாக்குகள் அவசியமாகிறது. தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் போது எம்எல்ஏக்களின் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதற்கான வாய்ப்புக்கள் பெரும்பாலும் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக, அதிமுக சார்பில் தலா 3 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும்.

தற்போது திமுக சார்பில் ஒரு எம்பி பதவி காலியாகிறது. இந்த தேர்தல் மூலம் 3 எம்பி பதவிகள் கிடைக்கிறது.

கடந்த முறை அதிமுகவுக்கு 4 எம்பி பதவி கிடைத்தது. ஒரு பதவியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்தது.

தற்போது அக்கட்சிக்கு 3 எம்பி பதவி மட்டுமே கிடைக்கும். திமுகவைப் பொறுத்தவரை கட்சிக்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை இதுவரை சசிகலாவுக்கு வேண்டியவர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது எடப்பாடி கை ஓங்கியுள்ளதால், அவர் நினைக்கும் ஆள்தான் எம்பியாக முடியும்.

இதனால் அதிமுகவில் எம்பி பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

.

மூலக்கதை